South Africa scored 308 in their first innings has terikka
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 122.4 ஓவர்களில் 308 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
நியூஸிலாந்தின் டுனெடின் நகரில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டீன் எல்கர் சதமடிக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
டீன் எல்கர் 128, டெம்பா பெளமா 38 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர். 2-ஆவது நாளான நேற்றுத் தொடர்ந்து ஆடிய அந்த அணி 252 ஓட்டங்களை எட்டியபோது டீன் எல்கர் ஆட்டமிழந்தார். அவர் 299 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் 140 ஓட்டங்கள் குவித்தார்.
இதையடுத்து டி காக் களமிறங்க, மறுமுனையில் டெம்பா பெளமா 143 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்பிறகு டி காக் 10 ஓட்டங்களில் கிளம்ப, டெம்பா பெளமா 164 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்தவர்களில் மகாராஜ் 5, ரபாடா 4, பிலாண்டர் 21 ஓட்டங்களில் நடையைக் கட்ட, 122.4 ஓவர்களில் 308 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா.
நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் டாம் லதாம் 10 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜீத் ரவாலுடன் இணைந்தார் கேப்டன் கேன் வில்லியம்சன். நிதானமாக ஆடிய ஜீத் ரவால் 95 பந்துகளில் அரை சதமடித்தார்.
மறுமுனையில் அசத்தலாக ஆடிய வில்லியம்சன், ரபாடா பந்துவீச்சில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விரட்டி 87 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இது அவருடைய 26-ஆவது அரை சதமாகும். நியூஸிலாந்து அணி 117 ஓட்டங்களை எட்டியபோது ரவால் ஆட்டமிழந்தார். அவர் 102 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் வந்த ராஸ் டெய்லர் 8 ஓட்டங்கள் எடுத்த நிலையில், தசைப்பிடிப்பு காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதையடுத்து வந்த நிகோலஸ் 12 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜீதன் படேல் களம்புகுந்தார். 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 55 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
வில்லியம்சன் 146 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 78, ஜீதன் படேல் 9 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கத் தரப்பில் மகாராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு நியூஸிலாந்து அணி இன்னும் 131 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியை பிடிக்கலாம்.
