South Africa scored 286 in first Test cricket Four wickets in the game

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் 286 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட் செய்யத் தீர்மானித்து தொடக்க வீரர்களாக டீன் எல்கர் - எய்டன் மார்க்ரம் களமிறக்கியது.

இதில் புவனேஸ்வர் வீசிய முதல் ஓவரிலேயே டக் ஔட் ஆனார் எல்கர். அவர் விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதேபோல, புவனேஸ்வர் வீசிய 2.6-வது ஓவரில் மார்க்ரம் 5 ஓட்டங்களில் எல்பிடபிள்யூ ஆகி நடையைக் கட்டினார்.

தென் ஆப்பிரிக்கா நிதானிக்கும் முன்பாக 4.5-வது ஓவரில் ஹசீம் ஆம்லாவை வெளியேற்றினார் புவனேஸ்வர் குமார். இதனால் 12 ஓட்டங்களுக்குள்ளாக மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென் ஆப்பிரிக்கா.

அடுத்து இணைந்த டி வில்லியர்ஸ் - டூ பிளெஸ்ஸிஸ் கூட்டணி, விக்கெட் சரிவை தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 114 ஓட்டங்கள் சேர்த்தது. டி வில்லியர்ஸ் 55 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மதிய உணவு இடைவேளையின்போது தென் ஆப்பிரிக்கா 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் டூ பிளெஸ்ஸிஸ் 98 பந்துகளுக்கு அரைசதம் எட்டினார். இந்தக் கூட்டணியை 32.6-வது ஓவரில் பிரித்தார் ஜஸ்பிரீத் பும்ரா. 11 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் எடுத்திருந்த டி வில்லியர்ஸ், போல்டாகி வெளியேறினார். அடுத்த மூன்று ஓவர்களிலேயே டூ பிளெஸ்ஸிஸும் 12 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.

அடுத்து வந்த டி காக் அரைசத வாய்ப்பை இழந்து 7 பவுண்டரிகள் உள்பட 43 ஓட்டங்களில் வெளியேறினார். பின்னர் களம் கண்ட பிலாண்டர், 4 பவுண்டரிகளுடன் 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில், முகமது சமி பந்துவீச்சில் போல்டானார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கேசவ் மஹாராஜ் 35 ஓட்டங்கள் , ககிசோ ரபாடா 26 ஓட்டங்கள் , மோர்னே மோர்கெல் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். டேல் ஸ்டெய்ன் 16 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்கள், அஸ்வின் 2 விக்கெட்கள், முகமது சமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஹார்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட் எடுத்து அசத்தினர்.

அதன்படி, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 286 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.