இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 282 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இரு அணிகளுக்கு இடையே கடந்த திங்கள்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸை இழந்தபோதும் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா, 116 ஓவர்களில் 392 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எல்கர் 129, டீ காக் 101 ஓட்டங்கள் எடுத்தனர்.

இலங்கையின் லாஹிரு குமாரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை 43 ஓவர்களில் 110 ஓட்டங்களுக்கு சுருண்டது. உபுல் தரங்கா அதிகபட்சமாக 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டங்கள் முன்னிலையுடன், 2-ஆவது இன்னிங்ஸை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா 51.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. எல்கர் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார்.

இலங்கையின் சுரங்கா லக்மல் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 507 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை 62 ஓவர்களில் 224 ஓட்டங்களுக்கு வீழ்ந்தது. கேப்டன் மேத்தியுஸ் அதிகபட்சமாக 49 ஓட்டங்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை வகிக்கிறது.