ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின்போது வார்னர் மற்றும் டிகாக்கு இடையே மோதல் மூண்டது. வார்னரும் டி காக்கும் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது.

இதுதொடர்பாக இரு அணி நிர்வாகமும் அளித்த புகாரின்பேரில் இருவரிடமும் நடுவர் விசாரணை நடத்தினார். அதில் இருவர் மீதும் தவறு இருந்ததால், இருவருக்கும் அபாரதம் விதிக்கப்பட்டதோடு ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டது. 

வார்னரின் மனைவியை டி காக் அவதூறாக பேசியதாகவும் அதனால்தான் வார்னர் சண்டைக்கு சென்றார் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு செயல் நடந்துள்ளது. 

குவிண்டன் டி காக் என்ன அவதூறாகக் கூறினார் என்று வெளிவராத நிலையில், வார்னரின் மனைவி கேண்டிஸ் வார்னருக்கும் ரக்பி நட்சத்திரம் சோனி பில் வில்லியம்ஸுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு உறவை அவதூறு செய்யும் விதமாக சோனி பில் வில்லியம்சின் முகமூடியை அணிந்து சில ரசிகர்கள் போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டிக்கு முன்னால் போஸ் கொடுத்தனர். அவர்களுடன் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு போஸ் கொடுத்தது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்த சம்பவம் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது நடந்தது. அப்போது, வார்னரின் மனைவியும் அந்த போட்டியை பார்க்க வந்திருந்தார்.

2007-ல் சிட்னி மதுபான விடுதியில் ரக்பி நட்சத்திரம் சோனி பில் வில்லியம்சுக்கும் வார்னர் மனைவிக்கும் இடையே நடந்த ஒரு பாலியல் விவகாரத்தைச் சுட்டிக்காட்டும் விதமாக வார்னரை வெறுப்பேற்ற இத்தகைய கீழ்த்தரமான ஒரு செயலைச் செய்துள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தன் அதிகாரிகள் செயலுக்கும் தென் ஆப்பிரிக்க ரசிகர்களின் செயலுக்கும் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளது.