தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளெசிஸ் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில், இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் கடந்த மே மாதம் திடீரென ஓய்வை அறிவித்தார்.

உலக கோப்பை கனவுடன் இருக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கும் டிவில்லியர்ஸின் ரசிகர்களுக்கும் அது பேரதிர்ச்சியாக அமைந்தது. அதன்பிறகு டிவில்லியர்ஸ் தனது முடிவை திரும்பப்பெற விரும்புவதாகவும் உலக கோப்பையில் ஆட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தனது ஓய்வு முடிவை திருப்பப்பெறுவதாக வெளிவரும் தகவல்கள் பொய்யானவை எனவும் தான் மீண்டும் சர்வதேச போட்டிகளில் ஆட வாய்ப்பே இல்லை என்றும் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளெசிஸ் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். 2019ல் இங்கிலாந்தில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை நடக்க உள்ளது. அதைத்தொடர்ந்து 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்க உள்ளது. 34 வயதான டுபிளெசிஸ், 2020ம் ஆண்டு நடக்க உள்ள டி20 உலக கோப்பைதான் அவரது கிரிக்கெட் வாழ்வின் கடைசி தொடராக அமைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். எனவே டுபிளெசிஸ் 2020ம் ஆண்டு டி20 உலக கோப்பையுடன் ஓய்வு பெற வாய்ப்புள்ளது.