south africa batsmen training to tackle chahal and kuldeep

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 3-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. இன்னும் மூன்று போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அதில் ஒரு போட்டியில் வென்றாலே இந்தியா தொடரை வென்றுவிடும்.

மூன்று போட்டிகளிலும் இந்தியாவின் அபாரமான வெற்றிக்கு மிக முக்கிய காரணம் ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹலும் குல்தீப்பும்தான். கடந்த மூன்று போட்டிகளில் இவர்கள் மட்டுமே சுமார் 21 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். 

சாஹல் மற்றும் குல்தீப்பின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் கொத்து கொத்தாக இவர்களிடம் சரணடைகின்றனர். சாஹலும் குல்தீப்பும் தூக்கி வீசுவதோடு மிகவும் மெதுவாக வீசுகின்றனர். இதனால் தென்னாப்பிரிக்க பேஸ்மேன்களால் அவர்களின் பந்துவீச்சை அடிக்க முடியவில்லை. அடிக்க முற்பட்டால் விக்கெட்தான். விக்கெட்டை பாதுகாக்க நினைத்து அடிக்காமல் தடுப்பாட்டம் ஆட நினைத்தாலும் எல்பிடபிள்யூ ஆகி அவுட்டாகின்றனர். 

சொல்லப்போனால், அந்த அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்கள் சாஹலும் குல்தீப்பும். ஏற்கனவே மூன்று போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா தோல்வியை தழுவிய நிலையில், நான்காவது போட்டி இன்று நடக்கிரது. இந்நிலையில், இவர்களை எதிர்கொள்ள புதிய பயிற்சி ஒன்றை தென்னாப்பிரிக்க வீரர்கள் பெற்று வருகின்றனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இந்திய வம்சாவளியான அஜய் ராஜ்புத் என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவில் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். அந்த போட்டிகளில் இவர் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார். எனவே இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்கும் விதமாக, அஜய் ராஜ்புத்தை அழைத்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பவுலிங் போட வைத்துள்ளனர். சாஹல் மற்றும் குல்தீப் போடுவது போல மெதுவாக பந்து போட சொல்லி, ஆம்லா, மார்க்ரம், டுமினி ஆகியோர் வெகுநேரம் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 3 போட்டிகளில் விளையாடாத டிவில்லியர்ஸ் இந்த போட்டியில் களமிறங்குகிறார். பிங்க் நிற ஆடையில் இன்று தென்னாப்பிரிக்கா விளையாடுகிறது. அந்த ஆடையில் அந்த அணி தோல்வியை கண்டதே இல்லை.

மேலும் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களை சமாளிக்க சிறப்பு பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். இவை எல்லாம் சேர்ந்து இன்று அந்த அணிக்கு பலனளிக்குமா? அல்லது வழக்கம்போல இந்தியாதான் வெல்லுமா? என்பதை பார்ப்போம்..