Sidney withdraws from international tennis
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்று வரை முன்னேறிய ஸ்பெயினின் கார்பின் முகுருஸா தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த முகுருஸா 6-3, 7-6(8/6) என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸை வீழ்த்தினார்.
அவர் காலிறுதியில் இருந்து விலகியதை அடுத்து அதில் முகுருஸாவுடன் மோத இருந்த ஆஸ்திரேலியாவின் டரியா காவ்ரிலோவா நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இந்த சீசனில் காயம் காரணமாக முகுருஸா விலகுவது இது 2-வது போட்டியாகும். முன்னதாக அவர் கடந்த வாரம் நடைபெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்தும் விலகியிருந்தார்.
இதனிடையே, இதர காலிறுதிக்கு முந்தைய சுற்றுகளில் போலாந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா 7-6(7/4), 6-0 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கேத்தரின் பெலிஸை வீழ்த்தினார்.
இத்தாலியின் கமிலா ஜியார்ஜி 7-6(9/7), 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவாவை வீழ்த்தினார்.
போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸின் அட்ரியான் மன்னாரினோ 6-2, 6-1 என்ற செட் கணக்கில் லிதுவேனியாவின் ரிகார்டாஸ் பெரான்கிஸை வென்றார்.
போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் உக்ரைனின் அலெக்ஸாண்டர் டோல்கோபோலோவை தோற்கடித்தார்.
பிரான்ஸின் பெனாய்ட் பேர் 6-2, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயரை வீழ்த்தினார்.
ரஷியாவின் டேனில் மெத்வதேவ் 6-3, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேர்ட் டொனால்ட்சனை வென்றார்.
