கலப்பு 50 மீ ரைபிள் ப்ரோன் எஸ்எச் 1 போட்டியில் பாரா ஷூட்டர் சித்தார்த்தா பாபு சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.
சீனாவின் ஹாங்சோவில் 4ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த 22ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 28ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தமாக 303 பேர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது நடந்து வரும் போட்டிகளில் கேனோ, பிளைண்ட் ஃபுட்பால், லான் பவுல்ஸ், ரோயிங் மற்றும் டேக்வாண்டோ ஆகிய ஐந்து விளையாட்டுகள் உட்பட 17 பிரிவுகளில் இந்தியா முதல் முறையாக பங்கேற்கிறது.
இந்த நிலையில் தான் இன்று நடந்த துப்பாக்கி சுடுதல் கலப்பு 50 மீ ரைபிள் ப்ரோன் எஸ்எச் 1 போட்டியில் பாரா ஷூட்டர் சித்தார்த்தா பாபு சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார். மற்றொரு போட்டியில் ஆண்களுக்கான பேட்மிண்டன் சிங்கிள்ஸ் SL-4 பிரிவில் இந்தியாவின் சுகந்த் கதம் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். இன்று நடந்த ஆண்களுக்கான 100 மீ T-37 தடகளப் போட்டியில்ஷ்ரேயன்ஷ் திரிவேதி பந்தய தூரத்தை 12.24 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு வீரர் நாராயண் தாக்கூர் 100 மீ T-35 பிரிவில் 14.37 வினாடிஅளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான ஷாட்புட் போட்டியில் F46 பிரிவில் சச்சின் சர்ஜராவ் கிலாரி 16.03 மீ தூரம் எறிந்து சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார். இதே போன்று ரோகித் குமார் 14.56 மீ தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். வில்வித்தை போட்டியில் இரட்டையர் W1 ஓபன் பிரிவில் அடில் முகமது நசீர் அன்சாரி மற்றும் நவீன் தலால் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். மற்றொரு வில்வித்தை காம்பவுண்ட் கலப்பு ஓபன் பிரிவில் ராகேஷ் குமார் மற்றும் ஷீத்தல் தேவி இருவரும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் 73ஆவது பதக்கத்தை பேட்மிண்டன் வீராங்கனை நித்ய ஸ்ரீ பெற்றுக் கொடுத்துள்ளார். பெண்களுக்கான பேட்மிண்டன் சிங்கிள்ஸ் எஸ்.எச்6 பிரிவில் போட்டியிட்ட நித்ய ஸ்ரீ வெண்கலம் வென்று இந்தியாவிற்கு 73ஆவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.
தற்போது வரையில் இந்தியா 18 தங்கம், 21 வெள்ளி மற்றும் 38 வெண்கலப் பதக்கத்துடன் 77 பதக்கங்களுடன் 6ஆவது இடம் பிடித்துள்ளது. இதுவே கடந்த 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
