தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்த பிசிசிஐ, உடனடியாக அவர்களை நாடு திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது. 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய சுற்றுப்பயணங்களில் இடம்பெற்றிருந்த அவர்கள் இருவரும் இந்த சர்ச்சையில் சிக்கியதால் நாடு திரும்புகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு பதிலாக இரண்டு மாற்று வீரர்களை அறிவித்துள்ளது பிசிசிஐ. 

ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் மற்றும் கேஎல் ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் அணியில் இணைகின்றனர். இவர்களில் விஜய் சங்கர் ஆஸ்திரேலியாவிற்கு செல்கிறார். பின்னர் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திலும் இடம்பெறுகிறார். ஷுப்மன் கில் ஆஸ்திரேலிய தொடரில் இல்லை. கில், நியூசிலாந்துக்கு செல்கிறார். 

ஷுப்மன் கில், ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்காக ஆடி 10 இன்னிங்ஸ்களில் 2 இரட்டை சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட 790 ரன்களை குவித்தார். மேலும் கடந்த ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடிய ஷுப்மன் கில், அந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி தொடர் நாயகன் விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார்.