ஆசிய கோப்பை தொடரில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த இடத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர் ஷோயப் மாலிக், தோனியுடன் சற்று நேரம் பேசிவிட்டு சென்றார்.

14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் இன்று தொடங்குகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ”ஏ” பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும் ”பி” பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணிகள் தங்களுக்குள் லீக் சுற்றில் தங்களுக்குள் தலா ஒருமுறை மோதிக்கொள்ளும். இதில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ”சூப்பர் 4” சுற்றுக்கு முன்னேறும். 

இதிலிருந்து இரு அணிகள் 28ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும். விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. 

இதற்காக துபாய் சென்றுள்ள இந்திய அணி வீரர்கள், பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சியின்போது, இந்திய வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த இடத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர் ஷோயப் மாலிக், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவிடம் தலையசைத்துவிட்டு, அங்கு உட்கார்ந்திருந்த தோனியிடம் பேசினார். தோனியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து சென்றார். அந்த வீடியோவை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

இன்று தொடங்கும் முதல் போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணி வரும் 18ம் தேதி ஹாங்காங் அணியுடனும் அதற்கு மறுநாளே பாகிஸ்தான் அணியுடனும் மோதுகிறது. ஓராண்டுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 19ம் தேதி மோதுவதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.