பாகிஸ்தான் அணி, டெஸ்ட் அணிக்கான கேப்டனை மாற்ற வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்திடம் தோற்று வெளியேறியது. இது அந்த அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்துக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவின் கேப்டன்சி குறித்த கேள்வி எழுந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் சர்ஃப்ராஸ் அகமது பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை. 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு அவரது சராசரி 15 ரன்களுக்கும் குறைவாகவே உள்ளது. உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், அணியில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து களைவது முக்கியம். 

இதற்கிடையே ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் மற்ரும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. 

இந்நிலையில், டெஸ்ட் அணிக்கு சர்ஃப்ராஸை நீக்கிவிட்டு பாபர் அசாமை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இதன்மூலம் சர்ஃப்ராஸின் கேப்டன்சி சுமையை குறைக்க முடியும். அதனால் அவரால் பேட்டிங்கில் கவனம் செலுத்தி மேம்பட முடியும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக பேசியுள்ள ஷோயப் அக்தர், சர்ஃப்ராஸ் அகமது 2019 உலக கோப்பை வரை பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிக்க வேண்டும். ஆனால் டெஸ்ட் போட்டிகளுக்கு பாபர் அசாமை கேப்டனாக்கலாம். அனைத்து விதமான அணிகளுக்கும் கேப்டனாக இருந்துகொண்டு சிறப்பாக ஆடுவது என்பது சர்ஃப்ராஸுக்கு சவாலான காரியம். எனவே சர்ஃப்ராஸ் தைரியமான முடிவை எடுத்துவிட்டு ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.