அஷ்வின் விஷயத்தில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கருத்துக்கு முற்றிலும் முரணான கருத்தை இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என வென்றுவிட்ட நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கடைசி போட்டிக்கான இந்திய அணியிலிருந்து அஷ்வின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அஷ்வினின் காயத்தை காரணம் காட்டி அவர் நீக்கப்பட்டிருந்தாலும், முதல் போட்டிக்கு பிறகு அவர் விக்கெட் எடுக்க முடியாமல் திணறியதும் அவரது பவுலிங் எடுபடவில்லை என்பதும்தான் உண்மையான காரணம் என கூறப்படுகிறது. 

இங்கிலாந்து தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வின், முதல் போட்டியில் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினார். அதன்பிறகு அவரது பவுலிங் எடுபடவில்லை. முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், அதன்பிறகு மூன்று போட்டிகளில் சேர்த்தே 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். 

ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்த சவுத்தாம்ப்டனில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அஷ்வின் சோபிக்கவில்லை. முதல் போட்டியில் அஷ்வினின் பவுலிங்கில் திணறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், அதன்பிறகு மிகவும் தெளிவாக நிதானமாக அஷ்வினின் பந்தை எதிர்கொண்டு ஆடினர். ஸ்பின்னிற்கு சாதகமான சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் அவரது பந்தை முழுவதுமாக விட்டு தெளிவாக பேக்ஃபூட் ஆடினர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். இந்த போட்டியில் அஷ்வின் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். ஒருவேளை அஷ்வின் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்திருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

அஷ்வினால் விக்கெட் வீழ்த்த முடியாத நிலையில், இங்கிலாந்து அணியின் ஸ்பின்னரான மொயின் அலி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அஷ்வின் சரியான இடங்களில் பந்துவீசாததே அவரால் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனதற்கு காரணம் என்று கவாஸ்கர், கங்குலி ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

அஷ்வினின் பவுலிங் குறித்து கருத்து தெரிவித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், அஷ்வின் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்யவில்லை. அதனால்தான் விக்கெட் வீழ்த்த முடியவில்லை என்று கூறியிருந்தார். ரவி சாஸ்திரி இவ்வாறு கூறியிருந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் சிறப்பாகவே பந்துவீசினார் என்று ரஹானேவும் புஜாராவும் கூறினர். ரவி சாஸ்திரியின் கருத்திலிருந்து மாறுபட்ட ரஹானே, அஷ்வின் சிறப்பாக பந்துவீசினார் என்று கூறியுள்ளார். 

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஷ்வின் காயமடைந்தார். அது முழுவதுமாக குணமடையாத நிலையில், நான்காவது போட்டியில் ஆடினார். அவர் சரியாக பந்துவீசமுடியாமல் போனதற்கு காயம் கூட காரணமாக இருக்கலாம்.