Shanghai Masters Federer and Nadal progress to the semi-finals

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடால் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டுடன் மோதினார்.

இதில், 7-5, 6-4 என்ற நேர் செட்களில் ரிச்சர்ட் காஸ்கட்டை தோற்கடித்தார் ஃபெடரர். 

ஃபெடரர் தனது அரையிறுதியில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல் போட்ரோவை சந்திக்கிறார்.

மற்றொரு காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவுடன் மோதினார்.

இதில், 6-4, 6-7 (4), 6-3 என்ற செட் கணக்கில் கிரிகோர் டிமிட்ரோவை தோற்கடித்தார் நடால். 

நடால் தனது அரையிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்கிறார்.