shane watson sharing about dhoni

ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு களமிறங்கியுள்ள சென்னை அணி மிரட்டலாக ஆடிவருகிறது. 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது. சென்னை அணியின் கேப்டன் தோனியும் அபாரமாக ஆடிவருகிறார். நல்ல ஃபார்மில் இருக்கும் தோனி, அனைத்து பவுலர்களின் பந்துகளையும் பறக்கவிடுகிறார்.

சென்னை அணி வெற்றிகளை குவிப்பதற்கு நிகராக சென்னை ரசிகர்கள், தோனியின் ஆட்டத்தையும் கொண்டாடிவருகின்றனர். பொதுவாக கடைசி வரிசையில் களமிறங்கும் தோனி, இந்த தொடரில் 4 அல்லது 5வது இடங்களில் களமிறங்கி அசத்தலாக ஆடிவருகிறார்.

10 போட்டிகளில் ஆடியுள்ள தோனி, 3 அரைசதங்களுடன் 360 ரன்களை குவித்துள்ளார். இதுவரை அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில், 7வது இடத்தில் இருக்கிறார் தோனி. இந்த தொடரில் தோனி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை அதிக சிக்ஸர் அடித்த வீரரும் தோனி தான். 10 போட்டிகளில் 27 சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார். தோனிக்கு அடுத்த இடங்களில் தான் கெய்ல், டிவில்லியர்ஸ் ஆகியோர் உள்ளனர்.

இந்த ஐபிஎல் சீசனில் தோனியின் அதிரடி பேட்டிங் குறித்து கோலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தோனியின் ஃபார்ம் இந்திய அணிக்கு பெரிய உதவியாக இருக்கும் என்பதால் கோலி மகிழ்ச்சி தெரிவித்தார்.

தோனியின் பேட்டிங், ரசிகர்களை மட்டுமல்லாது சக வீரர்களையும் மிரட்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தோனியின் அபார பேட்டிங்கை பார்த்து வியந்து போன மைக் ஹஸி, சமீபகாலத்தில் தோனி இப்படி ஆடி பார்க்கவில்லை என கருத்து தெரிவித்திருந்தார்.

தோனி தலைமையிலான சென்னை அணியில் ஆடும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சனும் தோனியின் ஃபார்ம் குறித்து அபாரமான பேட்டிங் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ஷேன் வாட்சன், நான் எப்போதும் பார்ப்பதை விட தோனி இப்போது பந்துகளை அருமையாக அடிக்கிறார். அனைத்து பவுலர்களின் பந்துவீச்சையும் அடித்து ஆடுகிறார் தோனி. தோனியை அருகிலிருந்து பார்ப்பது சிறப்பானது. தோனிக்கு எதிரணியில் ஆடும்போது அவரிடம் எதைப் பார்த்தேனோ, அவருடன் ஆடும்போதும் அப்படியே இருக்கிறார். எதிர்பார்ப்புகளையும் நெருக்கடிகளையும் தோனி மிகத்திறமையாக கையாள்கிறார். ஒரு வலிமையான தலைமையின் கீழ் ஆடுவது நன்றாக உள்ளது என வாட்சன் தெரிவித்துள்ளார்.