இங்கிலாந்தின் சீதோஷ்ன நிலையில் ஸ்விங் பந்துகளை ஆடுவது இந்திய அணிக்கு மட்டுமல்ல, எந்த அணிக்குமே சவாலான காரியம் தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து அணி வென்றது. இந்த தொடரில் இதுவரை நடந்த 4 டெஸ்ட் போட்டிகளிலுமே இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். பேட்ஸ்மேன்களின் சொதப்பல்தான் தோல்விக்கு காரணம். 

விராட் கோலி, ரஹானே, புஜாரா ஆகிய மூவரை தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் இங்கிலாந்து பவுலிங்கை சமாளித்து ஆடவில்லை. ஸ்விங் பந்துகளை எதிர்கொண்டு ஆட திணறி விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஆட உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. 

இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன், இங்கிலாந்தில் ஸ்விங் பந்துகளை ஆடுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அடுத்த ஆண்டு இங்கிலாந்து சென்று ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரில் ஆட உள்ளது. அந்த தொடரில் இங்கிலாந்தின் ஸ்விங் பந்துகளை ஆடுவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கும் சவாலான காரியம் தான். இங்கிலாந்தில் தான் சீதோஷ்ன நிலைக்கு ஏற்றவாறு பந்துகளி ஸ்விங் ஆகும். இங்கிலாந்தில் உடனடியாக அந்த சூழலுக்கு ஏற்ப வீரர்கள் தங்களை உடனடியாக மாற்றிக்கொள்வது கடினமான விஷயம்தான்.

இதற்கு முன்றைய ரெக்கார்டுகளின்படி, ஆஸ்திரேலியாவில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியுள்ளனர். விராட் கோலி, ராகுல், ரஹானே ஆகியோர் ஆஸ்திரேலியாவில் ரன்களை குவித்துள்ளனர். எனவே இங்கிலாந்தில் மாதிரி அல்லாமல் ஆஸ்திரேலியாவில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடுவர் என ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.