இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி தேர்வை அந்த அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே கடுமையாக விமர்சித்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றிராத இந்திய அணிக்கு, வரலாற்று வெற்றியை பதிவு செய்த அருமையான வாய்ப்புள்ளது. 

ஏற்கனவே 2-1 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகித்துவரும் இந்திய அணி, சிட்னியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு வாய்ப்பே இல்லை. எனவே இந்த தொடரை வென்று இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைக்கப்போவது உறுதியாகிவிட்டது. 

டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. ஜனவரி 12, 15, 18 ஆகிய மூன்று நாட்கள் ஒருநாள் போட்டிகள் நடக்க உள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், ஆஸ்திரேலியாவும் ஒருநாள் அணியை அறிவித்துள்ளது. 

ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), ஜேசன் பெரெண்டோர்ஃப், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், நாத்ன் லயன், ரிச்சர்ட்ஸன், பீட்டர் சிடில், ஸ்டேன்லேக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.

இந்த அணி தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே. ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டுள்ள சில வீரர்கள் மற்றும் அணியில் சேர்க்கப்பட்டுள்ள சில வீரர்கள் ஆகியவற்றை பார்க்கும்போது அபத்தமாக இருக்கிறது. ஃபாக்ஸ் கிரிக்கெட், என்னுடைய விருப்ப ஒருநாள் அணியை தேர்வு செய்யுமாறு கோரியது. அதனடிப்படையில் நான் இந்த அணியை தேர்வு செய்துள்ளேன் என்று ஒரு அணியை தேர்வு செய்துள்ளார். 

ஷேன் வார்னே தேர்வு செய்துள்ள அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), ஷார்ட், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் மார்ஷ்/அகார், பாட்டின்சன், ரிச்சர்ட்ஸன், மெரெடித், ஆடம் ஸாம்பா.  

மேற்கண்ட 11 பேரையும் தேர்வு செய்துள்ள வார்னே, கூடுதலாக கிறிஸ் லின் மற்றும் நாதன் லயன் ஆகிய இருவரையும் அணியில் தேர்வு செய்துள்ளார். 

இதேபோலவே சிட்னி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் டுவிட்டரில் தேர்வு செய்திருந்தார். அணி தேர்வில் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் சிறப்பாக செயல்படாததால் முன்னாள் வீரர்கள் இதுபோன்று அணியை தேர்வு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதை கங்குலி ஏற்கனவே கிண்டல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.