இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட்டை கேப்டன் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு ஜோஸ் பட்லரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஜோ ரூட் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பேற்ற ரூட்டின் கேப்டன்சியின் கீழ் இங்கிலாந்து அணி 21 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 10 வெற்றிகளையும் 9 தோல்விகளையும் தழுவியுள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு நிகரான தலைசிறந்த வீரராக ஜோ ரூட்டும் உள்ளார். ஆனால் அரைசதத்தை சதமாக மாற்றும் அவரது கன்வர்சன் ரேட் மிகவும் குறைவாக உள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 சதங்களும் 19 அரைசதங்களும் அடித்துள்ளார். ஸ்டீவ் ஸ்மித் 23 சதங்களும் 24 அரைசதங்களும் அடித்துள்ளார். ஆனால் ரூட், 14 சதங்களும் 41 அரைசதங்களும் அடித்துள்ளார். 41 அரைசதங்களில் குறைந்தது பத்தையாவது சதமாக மாற்றியிருக்கலாம். ஆனால் ரூட் அதை செய்ய தவறியதால் கோலி, ஸ்மித்தை காட்டிலும் மிகவும் பின் தங்கியுள்ளார். 

எனவே தான் கேப்டன்சி அழுத்தத்திலிருந்து ரூட்டை விடுவிப்பதன் மூலம் அவர் பேட்டிங்கில் சாதிக்க முடியும் என்று வார்னே நம்புகிறார். ரூட்டிற்கு பதிலாக ஜோஸ் பட்லரை இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கலாம் என்று வார்னே ஆலோசனை கூறியுள்ளார். 

ஐபிஎல்லில் வார்னே ஆலோசகராக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் ஆடினார். அப்போது பட்லருடன் பழகியதன் அடிப்படையில், பட்லரிடம் தலைமைக்கான பண்புகள் இருப்பதாகவும் அவர் ஒரு சிறந்த கேப்டனாக இருந்து இங்கிலாந்து அணியை வழிநடத்துவார் என்றும் வார்னே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.