பிசிசிஐ-யின் அறிவுரையை கொஞ்சம் கூட மதிக்காமல் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி செயல்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் மட்டும் இடம்பிடித்துள்ள ஷமி, இஷாந்த், அஷ்வின் ஆகிய வீரர்கள் இன்னும் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்லவில்லை. இவர்கள் வரும் 24ம் தேதி(நாளை மறுநாள்) ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு செல்கின்றனர். 

டி20 தொடர் நேற்று தொடங்கியதால் முன்னதாகவே மற்ற இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டனர். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் கடினமாக இருக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வேகப்பந்து வீச்சாளர்கள் கூடுதல் ஃபிட்னெஸுடன் இருக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். 

அதனால் ஷமி, இஷாந்த் மற்றும் நட்சத்திர ஸ்பின் பவுலர் அஷ்வின் ஆகிய மூவருக்கும் அண்மையில் பிசிசிஐ அறிவுரை வழங்கியிருந்தது. ரஞ்சி டிராபியில் ஆடிவரும் இவர்கள் மூவரில் இஷாந்தும் அஷ்வினும், ஆஸ்திரேலியாவிற்கு புறப்படும் முன்னதாக இனிமேல் ரஞ்சி போட்டியில் ஆடக்கூடாது என்று கடந்த மூன்று தினங்களுக்கு முன் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் பெங்கால் அணியில் ஆடிவரும் ஷமி மட்டும் நேற்று முன் தினம் தொடங்கி நடந்துவரும் கேரளாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் ஆட அனுமதிக்கப்பட்டார். அதுவும் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சம் 15 ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தார். 

ஆனால் கேரளா அணியின் முதல் இன்னிங்ஸில் 26 ஓவர்களை வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் ஷமி. பிசிசிஐ-யின் பேச்சை மதிக்காமல் 26 ஓவர்களை வீசினார் ஷமி. 

இதுகுறித்து விளக்கமளித்த ஷமி, நம் மாநில அணிக்காக ஆடும்போது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. என் உடற்தகுதி நன்றாக இருப்பதாக உணர்கிறேன், ஆடுகளமும் நன்றாக இருந்தது. எனவே என்னால் முடிந்தளவு வீசினேன். இது நானே எடுத்த முடிவுதான். மாநில அணிக்காக பந்துவீசுவதுதான் சிறந்த பயிற்சியாக அமையும். இது ஆஸ்திரேலியாவில் நான் சிறப்பாக பந்துவீச உதவும். ஒரு போட்டியில் ஆடுவதுதான் சிறந்த தயாரிப்பாக அமையும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டுக்கு தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.