shahid afridi respect indian national flag

இந்திய தேசிய கொடிக்கு மதிப்பளித்த ஷாகித் அஃப்ரிடியின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்துகொண்ட ஐஸ் கிரிக்கெட் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. கடும் குளிரில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில், இந்திய முன்னாள் வீரர் சேவாக் தலைமையிலான அணியும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடி தலைமையிலான அணியும் மோதின. 

இந்த போட்டியில் அஃப்ரிடி தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகை ஒருவர் அஃப்ரிடியுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்பினார்.

இதையடுத்து போட்டோ எடுப்பதற்காக அந்த பெண்ணுக்கு அருகே அஃப்ரிடி வந்தார். அப்போது இந்திய தேசிய கொடியை அந்த பெண் மடக்கியபடி கையில் வைத்திருந்தார். அதைக்கண்ட அஃப்ரிடி கொடியை விரிக்குமாறு கூறி இந்திய கொடியை விரித்தபடி, ரசிகையுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

பாகிஸ்தான் முன்னாள் வீரரான அஃப்ரிடியின் இந்த செயலைக் கண்டு இந்திய ரசிகர்கள் வியந்தனர். அந்நிய நாட்டு கொடியாக இருந்தாலும், இந்திய தேசிய கொடிக்கு மதிப்பளித்த அஃப்ரிடியை நெட்டிசன்கள் பாராட்டியும் புகழ்ந்தும் வருகின்றனர்.