டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் கமிட்டியில் இருந்து வீரேந்திர சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகிய மூவரும் கூட்டாக ராஜினாமா செய்துள்ளனர். 

டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் கமிட்டியில் சேவாக், ஆகாஷ் சோப்ரா, சங்வி ஆகிய மூவரும் இருந்துவந்தனர். இந்நிலையில், இவர்கள் மூவரும் திடீரென ராஜினாமா செய்துள்ளது டெல்லி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கிரிக்கெட்டை முன்னேற்ற தங்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் டெல்லி கிரிக்கெட்டின் நலன் கருதி தாங்கள் மூவரும் ராஜினாமா செய்வதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார். 

இந்த பொறுப்பு, தங்களது அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சேவாக் கூறியுள்ளார். ஆனால், இந்த கமிட்டிக்கு சிறப்பு அழைப்பாளராகவும் விஜய் ஹசாரே தொடருக்கான டெல்லி அணியின் கேப்டனாகவும் உள்ள காம்பீர், சேவாக் உள்ளிட்ட மூவரும் மனோஜ் பிரபாகரை பவுலிங் பயிற்சியாளராக நீடிக்க பரிந்துரைத்ததை காம்பீர் திட்டவட்டமாக மறுத்ததால்தான் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. 

2000ம் ஆண்டில் சூதாட்டப் புகாரில் சிக்கிய இந்திய வீரர்களில் மனோஜ் பிரபாகரின் பெயரும் அடிபட்டது. நேர்மையை விரும்பும் காம்பீர், மனோஜ் பிரபாகர் பவுலிங் பயிற்சியாளராக நீடிக்க விரும்பாததால் உறுதியாக எதிர்த்ததாக, காம்பீருக்கு நெருங்கிய டிடிசிஏ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இதனால்தான் சேவாக் உள்ளிட்ட மூவரும் ராஜினாமா செய்ததாக கூறப்படுவது தவறு என தெரிவித்தார். 

அந்த அதிகாரி சமாளிப்பதற்காக இதுபோன்று கூறினாலும் மனோஜ் பிரபாகர் விவகாரம் தான் சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகிய மூவரும் ராஜினாமா செய்ய காரணம் என கூறப்படுகிறது. இந்திய அணியில் சேவாக்கும் காம்பீரும் ஒன்றாக தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர். இப்படி இந்தியாவிற்காக ஒன்றாக ஆடிய வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.