sehwag praised chris gayle

கிறிஸ் கெய்லை ஏலத்தில் எடுத்ததன் மூலம் ஐபிஎல்லை காப்பாற்றி விட்டேன் என பஞ்சாப் அணியின் ஆலோசகர் சேவாக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

யுனிவர்ஸல் பாஸ் என அழைக்கப்படும் அதிரடி வீரர் கிறிஸ் கெய்லை, இந்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு கூட அவரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல், ஐபிஎல் தொடரில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவர் அடித்து ஆட தொடங்கிவிட்டால், அவர் இருக்கும் அணியின் ஸ்கோர் எதை எட்டும் என்பதை ஊகிக்க முடியாத அளவிற்கு அடித்து நொறுக்கும் வல்லமை வாய்ந்தவர். அதனால் தான் யுனிவர்ஸல் பாஸ் என அழைக்கப்படுகிறார்.

கடந்த சில ஐபிஎல் சீசன்களில் பெங்களூரு அணிக்காக ஆடிவந்தார் கெய்ல். சிறப்பாகத்தான் ஆடிவந்தார். ஆனால், ஐபிஎல்லில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவரை இந்த சீசனுக்கு ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இரண்டாவது ஏலத்திலும் அவரை எந்த அணியும் எடுக்கவில்லை.

கெய்லை எந்த அணியும் எடுக்காதது, உண்மையாகவே பெரிய ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியது. இறுதியில், அவரது அடிப்படை விலையான 2 கோடிக்கு, சேவாக் ஆலோசகராக உள்ள பஞ்சாப் அணி எடுத்தது. 

டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணியில் கெய்ல் விளையாடவில்லை. ஆனால், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கெய்லுக்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதமடித்து, அணி சிறந்த ஸ்கோரை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்தார். அந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 

அதன்பிறகு, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய கெய்ல், சதமடித்து அசத்தினார். கெய்லை எடுக்காமல் விட்டுவிட்டொமே என மற்ற அணிகளும், ஏற்கனவே தான் இருந்த பெங்களூரு அணியும் கவலைப்படும் அளவிற்கு அதிரடியாக ஆடி சதமடித்தார் யுனிவர்ஸல் பாஸ் கெய்ல்.

தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதை பெற்றார் கெய்ல். நேற்று ஆட்டநாயகன் விருதை பெற்ற கெய்ல் பேசும்போது, நான் யாரிடமும் நிரூபிப்பதற்காக இப்படி ஆடவில்லை. எப்போதுமே ரசித்து ஆடுவேன். அதேபோல் தான் இன்றும் பேட்டிங் ஆடினேன் என்றார்.

கெய்லின் அதிரடி சதம் குறித்து பஞ்சாப் அணியின் ஆலோசகர் சேவாக், தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்தார். அதில், கெய்லை ஏலத்தில் எடுத்து ஐபிஎல் தொடரை தான் காப்பாற்றிவிட்டதாக சேவாக் பதிவிட்டிருந்தார்.

அதற்கு, ஆமாம் என கெய்ல் பதிலளித்திருந்தார். கெய்லை தேர்வு செய்த தனது முடிவு சரியானது என்பதை குறிப்பிடும் வகையில், சேவாக் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். சேவாக்கின் நம்பிக்கையை எந்தவகையிலும் கெடுக்காத கெய்ல், ஆடிய இரண்டு போட்டிகளிலும் அதிரடியாக ஆடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.