ஆஸ்திரேலிய அணியைவிட அதிகமான ரன்களை அடித்தும் இந்திய அணி டக்வொர்த் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட ஸ்கோரைவிட 5 ரன்கள் குறைவாக எடுத்ததால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதை வைத்து முன்னாள் அதிரடி வீரர் சேவாக், தனக்கே உரிய பாணியில் காமெடி செய்துள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி நேற்று பிரிஸ்பேனில் நடந்தது. இந்த போட்டியில் மழை குறுக்கிட்டதால் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் இன்னின்ஸில் 16.1 ஓவரின் போது மழை குறுக்கிட்டது. அப்போதைக்கு அந்த அணி 153 ரன்களை எடுத்திருந்தது. அதன்பிறகு 17 ஓவர்களாக குறைக்கப்பட்ட பிறகு எஞ்சிய 5 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17 ஓவர் முடிவில் அந்த அணி 158 ரன்கள் எடுத்தது. 

இதையடுத்து டக்வொர்த் முறைப்படி இந்திய அணிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 174 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தவான் 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி இலக்கை விரட்ட முயன்றார். எனினும் இந்திய அணி 17 ஓவர் முடிவில் 169 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலிய அணியைவிட 11 ரன்கள் அதிகமாக எடுத்தும் கூட, டக்வொர்த் முறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்திய அணி.

இந்நிலையில், இதுகுறித்து டுவீட் செய்துள்ள சேவாக், ஆஸ்திரேலிய அணியைவிட அதிகமான ரன் குவித்தும் இந்திய அணி தோற்றுவிட்டது. ஆஸ்திரேலிய அணியைவிட அதிகமாக குவித்த ரன்கள் எல்லாம் ஜிஎஸ்டியில் போய்விட்டது போல.. ஆனாலும் தொடரை ஒரு நல்ல திரில்லான போட்டியுடன் தொடங்கியிருக்கிறார்கள் என்று சேவாக் டுவீட் செய்துள்ளார்.