இந்திய அணியின் மிகச்சிறந்த முன்னாள் டெஸ்ட் வீரர் விவிஎஸ் லட்சுமணனுக்கு தனக்கே உரிய பாணியில் சேவாக் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இந்திய அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக வலம்வந்தவர் லட்சுமணன். நான்காவது இன்னிங்ஸில் பலமுறை போராடி இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தவர். அதனாலேயே நான்காம் இன்னிங்ஸ் நாயகன் என்றுகூட அழைக்கப்பட்டார். அதிலும் 2001ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் பெற்ற போட்டியை, டிராவிட்டுடன் சேர்ந்து மீட்டெடுத்து அந்த போட்டியில் வரலாற்று வெற்றி பெற செய்தவர் லட்சுமணன். அந்த போட்டியில் அவர் அடித்த 281 ரன்கள் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாத ஸ்கோர்.

இதேபோன்று பலமுறை, நான்காம் இன்னிங்ஸில் போராடி இந்திய அணியை வெற்றி பெற செய்தவர். 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆடிய லட்சுமணன், ஒருநாள் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் கிரிக்கெட் ஆடிய 16 ஆண்டுகளில் நடந்த ஒரு உலக கோப்பைக்கான இந்திய அணியில்கூட அவர் இடம்பெறவில்லை என்பது வேதனைக்குரிய தகவல். 1996ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தனது டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்த லட்சுமணன், 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 17 சதம், 56 அரைசதம் உட்பட 8781 ரன்கள் குவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராகவும் இருந்துவருகிறார். இந்நிலையில் இன்று அவர் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சமகால கிரிக்கெட் வீரரான சேவாக், தனக்கே உரிய பாணியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொதுவாக சேவாக்கின் வாழ்த்துக்களும் டுவீட்டுகளும் வித்தியாசமாகவும் கிரியேட்டிவாகவும் இருக்கும். லட்சுமணனுக்கும் அப்படித்தான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லட்சுமணனுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள டுவீட்டில், லட்சுமணனின் ரிஸ்ட் இன்சூரன்ஸ் செய்து பாதுகாக்கப்பட வேண்டியது. ஸ்பெஷல் நபருக்கு எனது ஸ்பெஷலான பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டு லட்சுமணனின் அடையாளமாக திகழும் 281 ரன்களை பதிவிட்டுள்ளார்.