இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-2 என வெல்லும் என சேவாக் ஆருடம் தெரிவித்துள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. 

முதல் இரண்டு போட்டிகளிலுமே பேட்டிங்கில் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டியில் சுதாரித்து கொண்ட இந்திய அணி, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பறித்தது. இந்திய அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், விராட் கோலியை அதிகமாக சார்ந்திருப்பது, அந்த போட்டியிலும் தொடர்ந்தது. கோலியை மட்டுமே சார்ந்திருக்காமல், அனைத்து வீரர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். 

மூன்றாவது போட்டியில் பெற்ற வெற்றியால் உத்வேகமடைந்திருக்கும் இந்திய அணி, எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் நான்காவது போட்டியில் வென்று தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணி உள்ளது. 

இந்நிலையில், இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், விராட் கோலியின் கேப்டன்சியில் இந்த இங்கிலாந்து தொடரை இந்திய அணி 3-2 என வெல்லும். அது கடினமான விஷயம் தான். ஆனால் தற்போதைய இந்திய அணியால் முடியாத விஷயம் அல்ல என சேவாக் தெரிவித்தார். 

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்தில் இருக்கும் இந்திய அணி, நான்காவது டெஸ்ட் போட்டியை நான்காம் நாள் ஆட்டத்தில் வெல்லும் என நினைக்கிறேன் என்றார் சேவாக். மேலும் வீரர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும் விராட் கோலியின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. விராட் கோலி ரன்களை குவித்து வருகிறார். கோலியை அதிகமாக சார்ந்திருக்கிறது இந்திய அணி. அவர் மேலும் ரன்களை குவித்து இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுப்பார் என்று நம்புகிறேன் என சேவாக் தெரிவித்தார்.