மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டை அவுட்டாக்கிவிட்டு ஏதோ சொல்லி வழியனுப்பிவைத்தார் இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட். பிராடின் செயலுக்கு கோலி கொடுத்த பதிலடி சரிதான் என சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அசத்திய இந்திய அணி, 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திற்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். இதுதான் அவரது அறிமுக போட்டி. அறிமுக போட்டியிலேயே இரண்டாவது பந்தில் சிக்ஸர் விளாசி ரன் கணக்கை தொடங்கினார். பயமோ பதற்றமோ இல்லாமல் முதல் போட்டியிலேயே சிறப்பாக ஆடினார் ரிஷப் பண்ட்.

முதல் இன்னிங்ஸில் 24 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட்டை, இங்கிலாந்து அணியின் அனுபவ பவுலர் ஸ்டூவர்ட் பிராட் அவுட்டாக்கினார். ரிஷப்பை அவுட்டாக்கியதும் அவரிடம் சென்று ஏதோ பேசி அவரை வழியனுப்பிவைத்தார். ஐசிசி விதிமுறையை மீறிய செயல் என்பதால் பிராடுக்கு போட்டி ஊதியத்தில் 15% அபராதமாக விதிக்கப்பட்டது. 

அறிமுக போட்டியில் ஆடும் வீரரை அனுபவ பவுலரான பிராட், வழியனுப்பிய விதம் விரும்பத்தகாத சம்பவமாக அமைந்தது. அந்த போட்டியில் ரிஷப் பண்ட்டிடம் ஸ்லெட்ஜிங் செய்த பிராட், பேட்டிங் ஆட வந்தபோது, அவரிடம் கோலி இதுகுறித்து ஏதோ கேட்டுள்ளார். அதற்கு சிரித்தபடியே பதிலளித்த பிராட், இது டெஸ்ட் போட்டி.. இது இப்படித்தான் ஆக்ரோஷமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அதற்கு, சின்ன பையனிடம் அவ்வாறு நடந்துகொண்டதை சுட்டிக்காட்டினார் கோலி.

வழக்கமாக ஸ்லெட்ஜிங் செய்யும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது பதிலடி கொடுப்பது கோலியின் வழக்கம். அந்த வகையில், வாய்ப்பு கிடைத்த சமயத்தில் ரிஷப் பண்ட்டிடம் ஆக்ரோஷமாக நடந்துகொண்டது குறித்து கோலி கேட்டுவிட்டார். கோலியின் செயல் சரியானதுதான் என வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார். 120 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள பிராட், அறிமுக போட்டியில் ஆடும் வீரரிடம் அவ்வாறு நடந்துகொண்டதை கோலி சுட்டிக்காட்டியது தவறில்லை. கோலியின் செயல் சரிதான் என சேவாக் தெரிவித்துள்ளார்.