சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடி மன்னர்களாக திகழ்ந்தவர்களில் சேவாக்கும் அஃப்ரிடியும் முக்கியமானவர்கள் மற்றும் முதன்மையானவர்கள். இருவருமே பயம் என்பதை அறியாதவர்கள். எந்த சூழலிலும் அடித்து ஆட்டக்கூடியவர்கள். இவர்களையே அச்சுறுத்திய வீரர்கள் யார் என்று பார்ப்போம். 

இந்திய அணியின் தொடக்க மற்றும் வீரருமான சேவாக் அபாயகரமான வீரர். அசாத்தியமான அதிரடியால் போட்டியின் போக்கையே மாற்ற வல்லவர். இந்திய அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்து, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்குவதை வழக்கமாக கொண்டவர் சேவாக். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர், 2 முச்சதங்களை விளாசிய ஒரே இந்திய வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

சேவாக்கின் மிகப்பெரிய பலமே, எதிரணி எதுவாக இருந்தாலும் சரி, எதிரே பந்துவீசுவது யாராக இருந்தாலும் சரி, அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவரது வழக்கமான ஆட்டத்தை ஆடக்கூடியவர்.

சேவாக்கை போலத்தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி வீரர் அஃப்ரிடியும். அஃப்ரிடி ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர். அதிரடிக்கு பெயர்போனவர். இவரது அதிரடி பேட்டிங்கால், பூம் பூம் அஃப்ரிடி என்று அழைக்கப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்(476 சிக்ஸர்கள்) விளாசிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த அஃப்ரிடியின் சாதனை 18 ஆண்டுகளுக்கு பிறகே முறியடிக்கப்பட்டது. பேட்டிங்கில் எந்த வரிசையில் இறங்கினாலும் அதிரடியாகவே ஆடுவார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் மிரட்டியவர் அஃப்ரிடி. 

சர்வதேச கிரிக்கெட்டில் சேவாக் மற்றும் அஃப்ரிடி ஆகிய இருவருமே பயமே இல்லாமல் ஆடியவர்கள். எதிரணிக்கு பயம் காட்டுவார்களே தவிர பயத்தை அறியாதவர்கள். ஆனாலும் அவர்களும் ஒருசில தருணங்களில் எதிரணி வீரர்களுக்கு பயந்துள்ளார்கள். 

இருவரும் இணைந்து யூசி புரௌசர் நடத்திய உரையாடல் ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது இருவரிடமும் எந்த வீரருக்காவது பயந்ததுண்டா? அப்படி பயந்திருந்தால் யாருக்கு? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு இருவருமே பதிலளித்தனர். 

இதற்கு பதிலளித்த சேவாக், நான் சில தருணங்களில் பயந்தது என்றால் அது ஷோயப் அக்தருக்குத்தான். ஏனென்றால் அவரது எந்த பந்து காலை தாக்கும்? எந்த பந்து தலையை தாக்கும்? என்று தெரியாது. நிறைய பந்துகளை எனது தலைக்கு குறிவைத்து பவுன்சராக வீசியுள்ளார். அதேபோல அவரது பந்துகளை ரசித்து அடித்து ஆடுவதும் சிறப்பான ஒன்று என சேவாக் பதிலளித்துள்ளார்.

அதேபோல இந்த கேள்விக்கு பதிலளித்த அஃப்ரிடி, நான் எந்த வீரருக்கும் பயந்ததில்லை. ஆனால் சேவாக்கிற்கு பந்துவீசுவது கடினம் என அஃப்ரிடி தெரிவித்தார்.