these teams are won the kabadi match

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடிப் போட்டியின் ஆடவர் பிரிவில் சென்னை தபால் துறை அணியும், மகளிர் பிரிவில் ஒட்டன்சத்திரம் வெண்ணிலா கபடிக் குழு அணியும் முதலிடம் பெற்றன.

மன்னை சோழா கபடிக் குழு சார்பில் மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி மின்னொளியில் 3 நாள்களாக நடைபெற்றன.

இப்போட்டியின் ஆடவர் பிரிவில் 14 அணிகளும், மகளிர் பிரிவில் 14 அணிகளும் பங்கேற்றன. இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் ஆடவர் பிரிவில் சென்னை தபால் துறை அணியும், தமிழ்நாடு காவல் துறையின் சென்னை அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னை தபால் துறை அணி வெற்றி பெற்றது.

இதேபோல், மகளிர் பிரிவில் ஒட்டன்சத்திரம் வெண்னிலா கபடிக்குழு அணியும், மதுரை ஸ்ரீசக்தி டைல்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இதில் ஒட்டன்சத்திரம் வெண்ணிலா கபடிக்குழு அணி வெற்றி பெற்றது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், ஆடவர் பிரிவில் முதலிடம் பிடித்த சென்னை தபால் துறை அணிக்கு ரூ.1 லட்சம், இரண்டாமிடம் பிடித்த தமிழ்நாடு காவல் துறையின் சென்னை அணிக்கு ரூ.75 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த கன்னியாகுமரி, சென்னை ஐடெக் அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

மகளிர் பிரிவில் முதலிடம் பிடித்த ஒட்டன்சத்திரம் வெண்ணிலா கபடி குழுவுக்கு ரூ.50 ஆயிரம், இரண்டாமிடம் பெற்ற மதுரை ஸ்ரீசக்தி டைல்ஸ்க்கு ரூ.30 ஆயிரம், மூன்றாமிடத்தைப் பிடித்த கன்னியாகுமரி ஆர்.எம்.வி.கே.சி. அணி மற்றும் சேலம் ஏவிஎஸ் மகளிர் கல்லூரி அணிக்கு தலா ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் எஸ்.காமராஜ், முன்னாள் எம்எல்ஏ கு.சீனிவாசன், ஊராட்சி முன்னாள் தலைவர் டி.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.