சந்தோஷ் டிராபி போட்டியின் அரையிறுதியில் விளையாட கர்நாடகம்  - மேற்கு வங்கம், கேரளம் - மிசோரம் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்தியாவின் முதன்மையான கால்பந்து போட்டியாகக் கருதப்படும் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியான சந்தோஷ் டிராபி போட்டியில் 31 அணிகள் பங்கேற்றுள்ளன. 

இந்தப் போட்டி இப்போது 72-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் லீக் போட்டிகள் முடிவில் ஏ பிரிவில் கேரளம் முதலிடத்தையும், மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. பி பிரிவில் கர்நாடகம் முதலிடத்தையும், மிசோரம் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. 

இதனடிப்படையில் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் கர்நாடக அணி மேற்கு வங்கத்துடனும், கேரள அணி மிசோரம் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நேற்று நடைபெற்ற இறுதி லீக் ஆட்டத்தில் மிசோரம் அணியை கர்நாடகம் எதிர்கொண்டது. மிசோரம் அணி ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து விட்டதால் அதில், புதிதாக 9 வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. 

இந்தப் போட்டியில் கர்நாடகம் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றதுடன், பி பிரிவில் மிசோரம் அணியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தையும் பிடித்தது. 

இதன்மூலம் ஏ பிரிவில் இரண்டாம் இடத்தில் உள்ள மேற்கு வங்க அணியை அரையிறுதியில் கர்நாடகம் எதிர்கொள்ளகிறது. 

நடப்பு சாம்பியனான மேற்கு வங்கம் மிகவும் பலம் வாய்ந்த அணியாகும். அந்த அணி 32 முறை சந்தோஷ் டிராபியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.