ராகுலும் ரிஷப் பண்ட்டும் கிடைத்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளாமல் தொடர்ந்து சொதப்பிவருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்துள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் கடைசி போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து தொடர் 1-1 என சமனானது. 

இந்த தொடரில் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருமே சோபிக்கவில்லை. வழக்கமாக ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை என்றால் அடுத்த போட்டியில் அந்த வீரரை தூக்கி அடிக்கும் கோலி, இப்போதெல்லாம் அப்படி செய்வதில்லை. வீரர்களுக்கு தொடர் வாய்ப்புகளை வழங்கிவருகிறார். ஆனாலும் அந்த வாய்ப்புகளை ராகுலும் ரிஷப் பண்ட்டும் பயன்படுத்த தவறிவருகின்றனர். 

தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்கும் முயற்சியில் இந்திய அணி உள்ளது. ஆனால் அவர் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை. அதேபோல்தான் ராகுலும்.. இங்கிலாந்துக்கு எதிரான டி20யில் சதமடித்த ராகுல், அதன்பிறகு பெரிதாக சோபிக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவும் பெரியளவில் ஆடவில்லை. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி மற்றும் நேற்று நடந்த கடைசி போட்டி இரண்டிலுமே படுமோசமாக சொதப்பிவிட்டார். இரண்டு போட்டியிலுமே நன்றாக ஆடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனாலும் அதை ராகுல் பயன்படுத்திக்கொள்ளவில்லை. 

டி20 போட்டியிலேயே இந்த லட்சணத்தில் ஆடும் ராகுலுக்கு கண்டிப்பாக டெஸ்ட்  அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான். ஏனெனில் ரோஹித் சர்மா மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளதால் அவர்களில் ஒருவர் பிரித்வி ஷாவுடன் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டு ராகுல் ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளது. 

ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்டின் சீரில்லாத பேட்டிங் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், ராகுலும் ரிஷப் பண்ட்டும் சீராக ஆடுவதில்லை. அதனால் அவர்களில் ஒருவர் இடத்தை குருணல் பாண்டியாவுக்கு வழங்கிவிட்டு, சாஹலை அணியில் சேர்க்கலாம் என ஆலோசனை கூறியுள்ளார். 

அதாவது, ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு அந்த பேட்ஸ்மேன் இடத்தை குருணலை வைத்து நிரப்பிவிட்டு கூடுதலாக ஒரு ஸ்பின்னருக்கு அணியில் இடம் கொடுக்கலாம் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.