இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அனுபவ வீரருமான தோனி தற்போது ஃபார்மில்லாமல் தவித்து வருகிறார். இங்கிலாந்து தொடர், ஆசிய கோப்பை ஆகியவற்றில் சோபிக்கவில்லை. அதனால் கடும் விமர்சனங்களை தோனி எதிர்கொண்டுவருகிறார். 

ஏற்கனவே இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்னை நிலவிவரும் நிலையில், தோனி சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து சொதப்பிவருகிறார். உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ளதால் தோனி மீண்டும் ஃபார்முக்கு வருவது அவசியம்.

தோனியின் பேட்டிங் மீது விமர்சனங்கள் எழும்போதெல்லாம் மீண்டும் சிறப்பாக ஆடி தனது பேட்டிங்கின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் தோனி. அதேபோன்றதொரு பதிலடியையும் இப்போதும் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

தோனி பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அவரது அனுபவம், அணிக்கு தேவை. கேப்டனுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் போட்டியின் திருப்புமுனைகளை ஏற்படுத்தும் தருணங்களை ஏற்படுத்தி கொடுக்கின்றன. எனவே பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அனுபவ வீரர், இந்திய அணியின் வெற்றிகரமான அனுபவமான முன்னாள் கேப்டன் என்ற முறையில் 2019 உலக கோப்பை வரை தோனி ஆட வேண்டியது அவசியம்.

இந்நிலையில், தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், தற்போதைய சூழலில் தோனி சிறந்த ஃபினிஷராக இல்லை. ஆசிய கோப்பையில் கேதார் ஜாதவ் நல்ல ஃபார்மில் இருந்தார். எனினும் அவருக்கு முன்னதாக தோனி களமிறக்கப்பட்டார். தோனி தற்போது பேட்டிங் சரியாக ஆடுவதில்லை, ஃபார்மிலும் இல்லை. எனவே ரசிகர்கள் தோனியின் மீதான எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தோனியின் ரசிகர்களை சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து எறிச்சலடைய செய்துள்ளது.