பாண்டியாவும் அஷ்வினும் பொறுப்புடன் ஆடியிருந்தால் போட்டி வேறு மாதிரியாக திரும்பியிருக்கும் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கருத்து தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 273 ரன்கள் எடுத்தது. இந்திய அணி முதல் 50 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு கோலி-புஜாரா ஜோடி பொறுப்பாக ஆடி இந்திய அணியை மீட்டெடுத்தது. இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 92 ரன்களை சேர்த்தது. 

கோலி 46 ரன்களில் அவுட்டானதும், ரஹானே, ரிஷப் பண்ட், பாண்டியா, அஷ்வின் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இந்திய அணி 181 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 5வது விக்கெட்டாக ரிஷப் பண்ட் அவுட்டானார். அதன்பிறகு அடுத்த 14 ரன்கள் எடுப்பதற்குள் பாண்டியா, அஷ்வின், ஷமி ஆகிய மூன்று விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.

மறுமுனையில் அபாரமாக ஆடிவந்த புஜாராவிற்கு பாண்டியாவும் அஷ்வினும் பொறுப்பாக ஆடி ஒத்துழைப்பு கொடுத்திருந்தால், இந்திய அணி அதிகமான ஸ்கோரை அடித்திருக்க முடியும். ஆனால் அவர்கள் இருவரும் அதை செய்ய தவறிவிட்டனர். பாண்டியா 4 ரன்களிலும் அஷ்வின் 1 ரன்னிலும் வெளியேறினர். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார், பாண்டியாவும் அஷ்வினும் பொறுப்பை உணர்ந்து, ஷாட்களை ஆட கவனமாக பந்துகளை தேர்வு செய்திருக்க வேண்டும். பேட்டிங் ஆடுவதற்கு மட்டும் வீரர்கள் பயிற்சி பெறவில்லை. எந்த நேரத்தில் எப்படி ஆட வேண்டும் என்பதற்கும்தான் வீரர்கள் பயிற்சி பெறுகிறார்கள். அப்படியிருக்கையில் ஆட்டம் நன்றாக போய்க்கொண்டிருந்த சூழலில், இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. களத்தில் தன்னை நிலைநிறுத்தி கொள்வதற்கு முன்பாக மொயின் அலியின் பந்தை அஷ்வின் ஸ்வீப் ஷாட் ஆடமுயன்றார். அது அந்த நேரத்தில் தேவையே இல்லை. ஹர்திக் பாண்டியா அடித்த ஷாட்டும் தேவையில்லாதது. அந்தப் பந்தை தவிர்த்து ஆடி இருக்கலாம் என சஞ்சய் பங்கார் விமர்சித்துள்ளார்.