இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் முன்னெடுக்கும் பல்வேறு சர்ச்சை கருத்துகளையும் விவாதங்களையும் தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேறியுள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடந்துவருகிறது. ஓராண்டுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இந்த போட்டியின் மீது அதிகமாக உள்ளது. போட்டி துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இந்திய டென்னிஸ் வீராங்கனையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கின் மனைவியுமான சானியா மிர்ஸா, இந்த போட்டி தொடர்பான ரசிகர்களின் சர்ச்சை கருத்துகளை தவிர்ப்பதற்காக தற்காலிகமாக சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறியுள்ளார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்துகொண்டதால் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகளின்போது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் வீண் பதிவுகளை இட்டு வம்புக்கு இழுக்க வாய்ப்புள்ளது.

கர்ப்பமாக இருக்கும் சானியா மிர்ஸா, இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை கண்டுகொள்ளாமல், அதிலிருந்து விடுபடும் நோக்கில் தற்காலிகமாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறியுள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் இட்டுள்ள பதிவில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி தொடர்பான பல்வேறு சர்ச்சையான கருத்துகளில் இருந்து தப்பிக்க நான் இப்போதே பாதுகாப்பாக ட்விட்டரில் இருந்து வெளியேறி விடுகிறேன். அடுத்த சில நாட்களுக்கு சமூக ஊடகங்கள் பக்கம் வரமாட்டேன். கிரிக்கெட் போட்டி தொடர்பாக பல்வேறு முட்டாள்தனமான கருத்துகளை பலர் தெரிவிப்பார்கள். அதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் கருத்துகளால் சாதாரண நிலையில் இருப்பவர்களே உடல்நலம் குன்றிவிடுவார்கள். ஆனால், நானோ கர்ப்பமாக இருக்கிறேன். ஆதலால், விடைபெறுகிறேன். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி வெறும் கிரிக்கெட் போட்டி விளையாட்டுதான்; மறந்துவிடாதீர்கள் என சானியா மிர்ஸா பதிவிட்டுள்ளார்.