ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் விராட் கோலி முதலிடம் பெற்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஐசிசி, நேற்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலின்படி, இந்திய கேப்டன் விராட் கோலியின் புள்ளிகள் 873-இல் இருந்து, 887-ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, ஒருநாள் தரவரிசையில் 887 புள்ளிகள் பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை சச்சின் பெற்றிருந்தார். தற்போது அந்த சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் 2 சதங்கள் விளாசியதன் மூலம் கோலி இந்த ஏற்றத்தை அடைந்துள்ளார்.

ரோஹித் சர்மா, தோனி ஆகியோரும் பட்டியலில் ஏற்றம் கண்டுள்ளனர். அத்தொடரில் இரு சதங்கள் உள்பட மொத்தமாக 302 ஓட்டங்கள் குவித்த ரோஹித் 5 இடங்கள் முன்னேறி 9-வது இடத்துக்கு வந்துள்ளார்.

அதே தொடரில் மொத்தம் 162 ஓட்டங்கள் எடுத்த தோனி 2 இடங்கள் ஏற்றம் கண்டு 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் மொத்தம் 15 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியாவின் ஜஸ்பிரித் பூம்ரா பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில், 27 இடங்கள் முன்னேறி, முதல் முறையாக 4-வது இடத்துக்கு வந்துள்ளார்.

இதேபோல், இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் அக்ஸர் படேல் 20-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஹார்திக் பாண்டியா 2 இடங்கள் முன்னேறி 61-வது இடத்துக்கும், குல்தீப் யாதவ் 21 இடங்கள் முன்னேறி 89-வது இடத்துக்கும், யுவேந்திர சாஹல் 55 இடங்கள் முன்னேறி 99-வது இடத்துக்கும் வந்துள்ளனர்.

அணிகளுக்கான தரவரிசையில் 3-வது இடத்தில் நீடிக்கிறது இந்தியா என்பது கொசுறு தகவல்.