இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷாவிற்கு 10 ஆண்டுகளுக்கு முன் தான் கூறிய ஆலோசனைகள் குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

19 வயதே ஆன இளம் வீரர் பிரித்வி ஷா, எதிர்கால இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார். 19 வயதுக்கு உட்பட்ட உலக கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர். முதல் தர போட்டிகளிலும் சிறப்பாக ஆடியுள்ளார். அண்மையில் இங்கிலாந்தில் நடந்த இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் மோதிய முத்தரப்பு தொடரில், இந்திய ஏ அணியில் ஆடிய பிரித்வி ஷா சிறப்பாக ஆடினார். இதுவரை 14 முதல் தர போட்டிகளில் ஆடி 1418 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 56.72.

2018 ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக ஆடிய பிரித்வி ஷா, சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பிறகு இங்கிலாந்திலும் இந்திய ஏ அணிக்காக சிறப்பாக ஆடினார். இவரது பேட்டிங் ஸ்டைல், சச்சின் டெண்டுல்கரை போன்றே உள்ளது. இவரது கால் நகர்த்தல்கள், ஆட்ட முறைகள், உத்திகள் என எல்லாமே சிறப்பாக உள்ளன. 

இங்கிலாந்துக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பிரித்வி ஷா குறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், பத்தாண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் ஒருவர், பிரித்வி ஷா ஆடுவதை பார்க்குமாறு என்னை வலியுறுத்தினார். மேலும் பிரித்வியின் ஆட்டத்தை பார்த்து, அவருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குமாறும் கூறினார். அதன்பிறகு பிரித்வியின் ஆட்டத்தை பார்த்துவிட்டு, அவருக்கு சில ஆலோசனைகளையும் கூறினேன். பிறகு என் நண்பரிடம், பிரித்வி எதிர்காலத்தில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று கூறினேன் என்றார் சச்சின். 

மேலும், எதிர்காலத்தில் உனது பேட்டிங் உத்தி, பேட்டை பிடிக்கும் விதம் ஆகியவற்றை மாற்றுமாறு பயிற்சியாளர்கள் கூறினால் நீ மாற்றிவிடாதே.. அவர்களை என்னிடம் அனுப்பி பேசச்சொல் என்று பிரித்வியிடம் கூறியிருக்கிறேன். பயிற்சியாளர்களிடம் வீரர்கள் கற்பது நல்லது. ஆனால் அதிகப்படியான பயிற்சி நல்லதல்ல என சச்சின் தெரிவித்துள்ளார்.