புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா - பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசல் அதிகரித்துள்ளது. 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்த இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையாமாக கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

இந்த தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் அணியுடன் உலக கோப்பையில் இந்திய அணி ஆடக்கூடாது என்ற வலியுறுத்தல்களும், பாகிஸ்தானை உலக கோப்பையில் ஆட ஐசிசி தடை விதிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் வலுத்தன. ஆனால் இவையெல்லாம் சாத்தியமில்லை என்பதே உண்மை. 

ஐபிஎல் மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆகிய இரண்டு தொடர்களிலுமே ஆடிவரும் வெளிநாட்டு வீரர்களை ஏதேனும் ஒரு தொடரில் மட்டுமே ஆட வேண்டும். அது எந்த தொடர் என்பதை அவர்களே முடிவு செய்யுமாறு வலியுறுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

புல்வாமா தாக்குதல் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி, பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலில் சுமார் 300 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 14ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த சம்பவம் நடந்த 12 நாட்களில் இந்திய விமானப்படை தக்க பதிலடி கொடுத்துள்ளது. இவ்வளவு விரைவில் இந்திய விமானப்படை பதிலடி கொடுத்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்திய விமானப்படையின் இந்த அதிரடி தாக்குதலை சினிமா, விளையாட்டு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டிவருகின்றனர். சேவாக், காம்பீர், சாஹல் ஆகியோர் இந்திய விமானப்படைக்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், அதிரடியாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், நமது நற்குணமே நமது பலவீனமாக ஆகிவிடக்கூடாது என்று பதிவிட்டு விமானப்படைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

ரஹானே மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரும் இந்திய விமானப்படைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.