சர்வதேச அளவில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வருகிறார் இந்திய கேப்டன் கோலி. ஆட்டத்துக்கு ஆட்டம் சதங்களையும் சாதனைகளையும் குவித்து வருகிறார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை எல்லாம் விராட் கோலி முறியடித்துவிடுவார். விராட் கோலிதான் சமகால கிரிக்கெட்டில் மிகச்சிறந்த மற்றும் அபாயகரமான பேட்ஸ்மேன் என பல ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலியின் விக்கெட்டை எடுக்க முடியாமல் தென்னாப்பிரிக்க பவுலர்கள் திணறினர். தற்போது சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட்டராக கோலி அறியப்படுகிறார். பலர் சச்சினுடன் கோலியை ஒப்பிடுகின்றனர்.

இந்நிலையில் சச்சினுடன் கோலியை ஒப்பிடுவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத், சச்சின் விளையாடிய காலம் வேறு, விராட் கோலி விளையாடும் காலம் வேறு. இதை நான் ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. 

ஒவ்வொரு விதமான காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான தேவை ஏற்படும். ஆடுகளத்தைப் பொறுத்தவரை இப்போது பேட்டிங்குக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் விளையாடும் காலத்தில் அவரை ஆட்டமிழக்கச் செய்ய முடியும். ஆனால், இப்போது விராட் கோலி அனைவரின் பந்துவீச்சையும் வெளுத்துவாங்கி வருகிறார்.

விராட் கோலி இப்போதுள்ள நிலையில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதை வேகத்தில் அவர் பேட்டிங் செய்தால், உறுதியாக சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிப்பார் என மெக்ராத் தெரிவித்துள்ளார்.