ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்த சச்சின், அணியின் பங்குதாரர் குழுமத்தில் இருந்து விலகுவதை உறுதி செய்துள்ளார். 


கிரிக்கெட்டில் ஐபிஎல் ஆடுவதுபோல், கால்பந்துக்கு இந்தியன் சூப்பர் லீக்(ஐ.எஸ்.எல்) என்ற தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கால்பந்து தொடர் கடந்த 2014ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகிறது. முதல் சீசனில் 8 அணிகள் ஆடின. தற்போது 10 அணிகள் உள்ளன. 

இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இருந்துவந்தார். கடந்த 2014ம் ஆண்டு முதல் இவரும் உரிமையாளர்களில் ஒருவராக இருந்துவந்தார். இவருடன், கேரளா அணியின் இணை பங்குதாரர்களாக, தொழிலதிபர் நிம்மகட்டா பிரசாத், திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அர்ஜூன், நடிகர்கள் நாகர்ஜூனா, சீரஞ்சிவி ஆகியோர் இருக்கின்றனர். 

சச்சின் டெண்டுல்கர், கடந்த நான்கு ஆண்டுகளாகக் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று கலந்துகொண்டு, அணியை ஊக்கப்படுத்தி வந்தார். அடுத்த சீசன் தொடங்க உள்ள நிலையில், திடீரென அந்த அணியின் பங்குகளை விற்பனை செய்ய சச்சின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அந்த தகவலை சச்சின் டெண்டுல்கர் உறுதி செய்துள்ளார்.

கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதை உறுதி செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். இதுதொடர்பாக சச்சின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், என்னுடைய அணி(கேரள பிளாஸ்டர்ஸ்) நிர்வாகத்தினருடன் தீவிரமாக நடத்திய ஆலோசனைக்கு பின் அணியின் பங்குதாரர் குழுமத்தில் இருந்து விலகுவது என முடிவு செய்துள்ளேன். நான் விலகினாலும் என் மனது எப்போதும் கேரள பிளாஸ்டர்ஸை நினைத்துக்கொண்டு தான் இருக்கும். கேரள பிளாஸ்டர்ஸுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.