இந்திய அணியை கிண்டலடிக்க முயன்று நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டி கொண்டுள்ளார் இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் அர்னால்டு.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து அணி வென்றது. முதல் போட்டியில் வெற்றியின் விளிம்புவரை வந்த இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இரண்டாவது டெஸ்டில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டி 3 நாட்களிலேயே முடிந்துவிட்டது. 

மூன்றாவது போட்டியில் வென்ற இந்திய அணி, நான்காவது போட்டியிலும் போராடி தோல்வியடைந்தது. இந்த போட்டியும் 4வது நாளில் முடிந்துவிட்டது. இந்த தொடரின் எந்த போட்டியுமே 5 நாட்கள் முழுமையாக நடைபெறவில்லை. 

நான்காவது போட்டியில் 245 ரன்கள் என்ற இலக்கை எட்டமுடியாமல் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில், இந்திய அணியை கிண்டல் செய்யும் விதமாக டுவீட் செய்துள்ளார் இலங்கை அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் அர்னால்டு. 

அந்த டுவீட்டில், டெஸ்ட் கிரிக்கெட் 5 நாட்கள் தானே..? என இந்திய அணியின் தோல்வியை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டிருந்தார். இதைக்கண்ட நெட்டிசன்கள், அர்னால்டின் மூக்கை உடைக்கும் விதமாக பதிலடி கொடுத்துவருகின்றனர். 

அர்னால்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரசிகர் ஒருவர், ஒருநாள் கிரிக்கெட்டில் தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோர் 264, இலங்கைக்கு எதிராக ரோஹித் அடித்தது. அவர் ஒருவரின் ஸ்கோரைவிட 13 ரன்கள் குறைவாக எடுத்து தோற்றது இலங்கை தானே? என கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்.

மற்றொரு ரசிகர், ஓகே.. ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இதேபோல 3 அல்லது 4 நாட்களில் இலங்கை அணி தோற்றால், அப்போதும் இதே கேள்வியை கேட்கும் திராணி இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு ரசிகர் கடுமையாக தாக்கியுள்ளார். இலங்கைக்கும் ரோஹித் சர்மாவிற்கும் இடையே டெஸ்ட் போட்டி நடத்தினால் மூன்றே நாட்களில் முடிந்துவிடும். அந்த போட்டியில் ரோஹித் ஜெயித்துவிடுவார் என பதிலடி கொடுத்துள்ளார்.

இதேபோல ரசிகர்கள் பல பதிலடி டுவீட்டுகளை பதிவிட்டு அர்னால்டை அலறவிட்டுள்ளனர்.