ஐபிஎல் 11வது சீசனின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் போட்டி நடந்தது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ராகுலும் அகர்வாலும் களமிறங்கினர். டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்த ராகுல், நேற்றும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடிக்க தொடங்கினார்.

ராகுலும் அகர்வாலும் அதிரடியாக ஆடினர். அணியின் ஸ்கோர் 32 ஆக இருக்கும்போது உமேஷ் யாதவ் வீசிய 4வது ஓவரில் அகர்வால், ஆரோன் ஃபின்ச், யுவராஜ் ஆகியோரை வீழ்த்தி மிரட்டினார் உமேஷ். அதன்பிறகும் சிறப்பாக ஆடிய ராகுல் 47 ரன்களில் வெளியேற அணியின் ஸ்கோர் வேகம் குறைந்தது. 

பஞ்சாப் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின், 33 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு உதவினார். 19.2 ஓவருக்கே 155 ரன்களுக்கு பஞ்சாப் அணி ஆல் அவுட்டானது.

இதையடுத்து 156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் மெக்கல்லம், முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே அவுட்டானார். போன ஆட்டத்தில் சரியாக ஆடாமல் போல்டான கேப்டன் கோலி, இந்தமுறையும் போல்டாகி வெளியேறினார். 21 ரன்கள் எடுத்திருந்தபோது முஜீபுர் ரஹ்மானின் பந்தில் கோலி போல்டானார். 

இதன்பிறகு ஜோடி சேர்ந்த டிகாக் மற்றும் டிவில்லியர்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. சிறப்பாக ஆடிய டி காக்கை அவுட்டாக்கிய அஸ்வின், அதே ஓவரில் சர்ஃபராஸ் கானையும் வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். எனினும் மறுமுனையில் பொறுமையாக ஆடிய டிவில்லியர்ஸ் அரைசதம் கடந்து வெற்றிக்கு வழிவகுத்தார். 57 ரன்களில் டிவில்லியர்ஸ் வெளியேறினாலும், பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

உமேஷ் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார். கொல்கத்தாவிடம் தோல்வியை தழுவிய பெங்களூரு அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.