ஆஸ்திரேலியாவில் ஒரு மோசமான சம்பவத்தை மாற்றியே தீரவேண்டும் என்ற உறுதியில் உள்ளார் ரோஹித் சர்மா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 288 ரன்களை குவித்தது. 289 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 4 ரன்னுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட, ரோஹித்தும் தோனியும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா, 22வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். ரோஹித் சர்மா 133 ரன்களை குவித்தார். எனினும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் சர்மா 7 சதங்களை அடித்தது உட்பட இந்த சதத்தின் மூலம் பல சாதனைகளை படைத்தார். எனினும் இந்திய அணி தோற்றுவிட்டது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவில் ஒரே ஒரு விஷயத்தை மாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். நான் சதமடித்தால் அணி வெற்றி பெற வேண்டும். இதுவரை நான் ஆஸ்திரேலியாவில் சதமடித்த அனைத்து போட்டிகளிலுமே இந்திய அணி தோற்றுவிட்டது. எனவே நான் சதமடித்தால் அணி ஜெயிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என்று ரோஹித் தெரிவித்தார். 

ரோஹித் சர்மா 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் முதல் சதமடித்தார். அந்த போட்டியில் இந்திய அணி தோற்றுவிட்டது. அதன்பிறகு 2016ம் ஆண்டில் இரண்டு சதங்கள் அடித்தார். அந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி தோற்றுவிட்டது. அதேபோல் இந்த முறை ரோஹித் சர்மா சதமடித்த சிட்னி போட்டியிலும் இந்திய அணி தோற்றது குறிப்பிடத்தக்கது.