rohit sharma very confident about triple century in one day international

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்களை அடித்து சாதனை படைத்துள்ள ரோஹித் சர்மா, முச்சதம் அடிப்பதும் சாத்தியம்தான் என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று தொடர்களையும் வென்று இந்திய அணி அசத்தியது. 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 209 ரன்களும் 2014ம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக 264 ரன்களும் அடித்து மிரட்டிய ரோஹித் சர்மா, அண்மையில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இரட்டை சதமடித்து அசத்தினார்.

இவ்வாறு ஒருநாள் போட்டியில் மூன்றுமுறை இரட்டை சதமடித்த வீரர் என்ற பெருமைக்குரியவராக ரோஹித் திகழ்கிறார். தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணி தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே மூன்றுமுறை இரட்டை சதமடித்து மிரட்டிய இந்திய அணியின் அதிரடி நாயகன் ரோஹித் சர்மா, தற்போதுள்ள சூழலில் கிரிக்கெட்டில் எதுவும் சாத்தியமே. 264 ரன்கள் அடித்தேன். வெறும் 36 ரன்களில் முச்சதம் அடிக்க முடியாமல் போய்விட்டது. 264 சாத்தியாகும்போது முச்சதம் சாத்தியமில்லையா? கண்டிப்பாக சாத்தியம்தான். அந்த நாள் உங்களுடையதாக இருக்கும் பட்சத்தில் எதுவும் சாத்தியமே என ரோஹித் தெரிவித்துள்ளார்.

இலங்கையை தெறிக்கவிட்ட இந்திய அணி, சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை ஓடவிடுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. அதிலும் அதிரடி நாயகன், முச்சத மன்னன் ரோஹித் சர்மாவின் நம்பிக்கையான இந்த பேச்சு, ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.