இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆசிய கோப்பை தொடரில் ஆடிவருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் 14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இன்று நடக்க உள்ள இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. 

இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இந்திய அணி ஆட உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3டி20 போட்டிகளில் கலந்துகொண்டு ஆடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்ததும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா சென்று இந்திய அணி ஆட உள்ளது.

அக்டோபர் 4ம் தேதி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. அதனால் அதற்கான அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் இன்னும் ஓரிரு நாட்களில் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. 

எனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வீரர்கள் தேர்வு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மனதில் வைத்தே அமைய உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து தொடரில் சொதப்பிய ஷிகர் தவானுக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டது. அதேபோல ரோஹித் சர்மாவிற்கும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மிகச்சிறந்த மற்றும் அபாயகரமான தொடக்க வீரரான ரோஹித் சர்மாவிற்கு டெஸ்ட் அணியில் இன்னும் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆடியதுதான். அதன்பிறகு ரோஹித் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை. தென்னாபிரிக்க தொடரிலுமே பாதியில் நீக்கப்பட்டார். 

ரோஹித் சர்மா - ஷிகர் தவான் ஜோடி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வெற்றிகரமான மற்றும் எதிரணிக்கு அபாயகரமான ஜோடியாக வலம்வருகிறது. ஆனால் இவர்கள் இருவருமே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓரங்கட்டப்பட உள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிவரும் ரோஹித், இந்திய அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தியும் வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை விளாசிய ஒரே வீரர் ரோஹித் சர்மா தான். ஆனால் டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார். 

இளம் வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் மயன்க் அகர்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.