rohit sharma secret of success

இந்திய அணியில் இடம்பெற்ற ஆரம்ப காலத்தில் நிரந்தரமாக இடம் கிடைக்காமலும் உடலில் ஏற்பட்ட காயங்களாலும் தவித்து வந்தார். காயம் காரணமாகவும் ஃபார்ம் அவுட் காரணமாகவும் அணியில் நிரந்தரமாக இடம் கிடைக்காமல் தவித்துவந்தார். 

அதன்பிறகு தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட ரோஹித் சர்மா, பல தருணங்களில் தன்னை நிரூபித்தார். ஒருநாள் போட்டியில் ஏற்கனவே இருமுறை இரட்டை சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா, கடைசியாக இலங்கையுடன் நடந்த ஒருநாள் போட்டி ஒன்றிலும் இரட்டை சதமடித்தார்.

கோலி விடுமுறையில் இருந்ததால், கேப்டனாக செயல்பட்ட ரோஹித், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை வென்றார். தனது திருமண நாளன்று இரட்டை சதமடித்து தனது மனைவிக்கு அர்ப்பணித்தார். ரோஹித்தின் மனைவி கைதட்டி உற்சாகப்படுத்தியதோடு, ரோஹித்தின் அபார ஆட்டத்தைக் கண்டு மகிழ்ச்சியில் கண்கலங்கினார்.

அதேபோல், மனைவியின் பிறந்தநாளன்று நடந்த டி20 போட்டியில் சதமடித்து அசத்தினார். ரித்திகாவையும் சேர்த்து அணியில் 17 பேர் என்றும் ரோஹித்தின் அதிரடியான ஆட்டத்துக்கு அவரது மனைவி மைதானத்துக்கு வருவதுதான் என்றும் வேடிக்கையாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரோஹித், ரித்திக்காவையும் சேர்த்து அணியில் 17 பேர் என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இதுபோன்றவற்றைக் கேட்கும்போது மிகவும் வேடிக்கையாக இருக்கும். அவர் மனைவி, தோழி, மேலாளர் என எல்லாமுமாக இருந்து எனக்கான சுதந்திரத்தைத் தருகிறார். அதன்மூலமாக நான் களத்தில் இன்னும் சிறப்பாக விளையாடுகிறேன் என ரோஹித் பதிலளித்தார்.