'மனதளவில் உடைந்து விட்டேன்'; தோல்விக்கு பிறகு உருக்கமாக பேசிய ரோகித் சர்மா; முழு விவரம்!
'மனதளவில் உடைந்து விட்டேன்' என்று 4வது டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும் நிதிஷ் குமார் ரெட்டியையும், பும்ராவையும் அவர் பாராட்டினார்.
இந்தியா படுதோல்வி
மெல்பர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நிதிஷ் குமார் ரெட்டி முதல் சதம் (114 ரன்) விளாசினார்.
பின்பு 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா (9), விராட் கோலி (5), கே.எல்.ராகுல் (0), ரிஷப் பண்ட் (30) என முன்னணி வீரர்கள் சொதப்பியால் இந்திய அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது.
மனதளவில் கடினமாக உள்ளது
இந்த தொடரில் ரோகித் சர்மா சரியாக பேட்டிங் செய்யவில்லை; அத்துடன் அவரது கேப்டன்சியும் சுத்தமாக சரியில்லை. இதேபோல் கோலியின் பேட்டிங்கும் படுமோசமாக உள்ளது. இதனால் இருவரும் ஓய்வு பெற வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், 4வது டெஸ்ட் தோல்விக்கு பிறகு மனதளவில் உடைந்து விட்டதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மெல்பர்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இந்த தோல்வி மனதளவில் மிகவும் கடினமாக தொந்தரவு செய்கிறது. நாங்கள் இறுதிவரை போராட விரும்பினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதைச் செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 91/6 என்ற நிலையில் இருந்தபோது மீண்டும் அழுத்தம் கொடுக்க தவறி விட்டோம். 340 ரன்கள் இலக்கு கடினமாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும்.
தோல்விக்கான காரணம் இதுதான்
ஆனால் தொடக்கத்தில் சரியான அடித்தளம் அமைத்து கடைசி இரண்டு செஷசன்களில் இலக்கை நோக்கி செல்ல விரும்பினோம். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் நன்றாக பந்து வீசி எங்களது திட்டத்தை தகர்த்து விட்டனர். ஒட்டுமொத்த டெஸ்ட் போட்டியைப் பார்த்தால், எங்களுக்கு பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால் வெல்வதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதில் தவறிவிட்டோம்'' என்றார்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி குறித்து பேசிய ரோகித் சர்மா, '' நிதிஷ் குமார் ரெட்டி முதன்முறையாக இங்கு விளையாடுகிறார். இங்கு விளையாடுவது கடினம். ஆனாலும் அவர் தனது திறமையையும், பேட்டிங் நுட்பத்தையும் வெளிக்காட்டுகிறார். கடினமான சூழ்நிலைகளில் இருந்து வெற்றி பெறும் வழிகளை அவர் தெரிந்து வைத்துள்ளார். அவருக்கு அணியில் இருந்து ஆதரவு உள்ளது'' என்றார்.
பும்ராவுக்கு சப்போர்ட் கிடைக்கவில்லை
மேலும் பும்ரா குறித்து பேசிய ரோகித் சர்மா,''ஜஸ்பிரித் பும்ரா புத்திசாலியான வீரர். பல ஆண்டுகளாக அவரைப் பார்த்து வருகிறோம். அவர் சாதனைக்காக விளையாடும் நபர் அல்ல. நாட்டிற்காக விளையாடி அணிக்கு சிறப்பாக செயல்பட விரும்புகிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு மற்ற பவுலர்களிடம் இருந்து சப்போர்ட் கிடைக்கவில்லை'' என்று கூறினார்.