ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் இன்று ஹாங்காங்குடன் மோதுகிறது. இந்நிலையில், பேட்டிங் வரிசை குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கான தேர்வு வேட்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு முந்தைய போட்டிகளில் மிடில் ஆர்டர்தான் பிரச்னையாக இருந்தது. இன்னும் அந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை. 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு ஆசிய கோப்பை தொடரில் தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக முழு ஈடுபாட்டுடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் கேப்டன் ரோஹித் சர்மா. கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். 

உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ளதால் மிடில் ஆர்டர் பிரச்னைக்கு முடிந்தளவிற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். இன்று இந்திய அணி ஹாங்காங்குடன் மோதுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, இந்த தொடரில் 3,4,6 ஆகிய இடங்களுக்கு ராயுடு, மனிஷ், கேதார் ஜாதவ் ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்திய அணியை பொறுத்தமட்டில் 4 மற்றும் 6 ஆகிய இடங்களுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டி உள்ளது. ராயுடு, கேதார் ஜாதவ் அணியின் முக்கியமான வீரர்கள். இவர்கள் மீண்டும் அணியில் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. இவர்கள் இந்திய அணிக்கு போட்டிகளை வெற்றிப் பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என ரோஹித் சர்மா தெரிவித்தார். 

ரோஹித் சர்மாவின் பேச்சிலிருந்து தோனி 5வது இடத்தில் களமிறங்க உள்ளது உறுதியாகியுள்ளது. இதுவரை தோனி 6வது வரிசையில் நிரந்தரமாக களமிறக்கப்பட்டு வந்தார். சில நேரங்களில் சூழலுக்கு ஏற்றவாறு சற்று முன்னதாக களமிறக்கப்படுவார். ஆனால் தோனியை 4ம் வரிசையில் நிரந்தரமாக களமிறக்க வேண்டும் என்று ஜாகீர் கான் உள்ளிட்ட சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் தோனி இறுதிக்கட்டத்தில் போட்டிகளை வென்று கொடுப்பவர் என்பதால், அவர் இனிமேல் 5வது இடத்தில் நிரந்தரமாக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.