14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் துபாயில் நேற்று முன்தினம் நடந்த சூப்பர்-4 சுற்று ஆட்டத்தில்  இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கியது. டாஸ் வென்று  முதலில் பேட்டிங் செய்ய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோயிப் மாலிக் 78 ரன்னும், கேப்டன் சர்ப்ராஸ் அகமது 44 ரன்னும் எடுத்தனர்

பின்னர் 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் அதிரடியாக ஆடி 210 ரன்கள் குவித்தனர். 15-வது சதம் அடித்த ஷிகர் தவான் 100 பந்துகளில் 16 பவுண்டரி, 2 சிக்சருடன் 114 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் சோயிப் மாலிக் பந்து வீச்சில் ஹசன் அலியால் ரன்-அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இந்த இணை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.

இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி ‘சூப்பர்-4’ சுற்றில் தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இது.  முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை சாய்த்து இருந்தது. ஏற்கனவே லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை பதம் பார்த்து இருந்தது

இந்நிலையில் செய்தியளார்களிடம் பேசிய  இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா , நமது அணியின் ஒட்டுமொத்த பவுலர்களும் தங்கள் இலக்கை எட்ட தீவிரம் காட்டினார்கள். சவாலான இந்த சூழலில் பந்து வீச்சாளர்கள் மீண்டும் சிறப்பாக செயல்பட்டு எதிரணியை அதிகம் ரன் குவிக்க விடாமல் கட்டுப்படுத்தினார்கள் பாராட்டினார்.

ஷிகர் தவான் அணியில் தனது பங்கை உணர்ந்து விளையாடக்கூடியவர். நான் அவரிடம் அதிகம் பேச வேண்டிய அவசியம் கிடையாது. எங்கள் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. இங்குள்ள சூழலில் சிக்சர் அடிப்பது எளிதான காரியம் அல்ல. அதற்காக கடினமாக பயிற்சி எடுத்தேன். எதிரணி பவுலர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற அதிரடி ஷாட்களை ஆடினேன் என தெரிவித்தார்.

ஏனெனில் பாகிஸ்தான் அணி வலுவான பந்து வீச்சை கொண்டதாகும். அவர்களுக்கு நாம் நெருக்கடி கொடுக்கவில்லை என்றால் அவர்கள் முன்பு போல் நமக்கு தொல்லை கொடுத்து விடுவார்கள். முதல் 10 ஓவர்களுக்குள் விக்கெட்டை இழக்காமல் விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டோம் என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.