ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா ஆட வாய்ப்பில்லை.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டி இன்று நடக்கிறது. இன்றுடன் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிவடைகிறது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சேர்க்கப்படவில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார். 

வரும் 21ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி தொடங்குகிறது. இதற்கிடையே இந்தியா ஏ அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த ஏ அணியுடன் 3 அதிகாரப்பூர்வமற்ற 4 நாட்கள் டெஸ்ட் போட்டியும் மூன்று அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டிகளிலும் ஆட உள்ளது. 

இதில் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் நான்கு நாள் போட்டியில் இந்தியா ஏ அணியில் ரோஹித் சர்மா ஆடுகிறார். இந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆடுவதை பொறுத்துத்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆடும் லெவனில் அணியில் வாய்ப்பளிப்பது குறித்து முடிவு செய்யப்படும். எனவே ரோஹித் சர்மாவிற்கு இந்த போட்டி முக்கியமானது. 

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் நான்கு நாள் போட்டி வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. எனவே 19ம் தேதிவரை ஆடிவிட்டு பின்னர் நியூசிலாந்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து 21ம் தேதி நடக்கும் டி20 போட்டியில் ரோஹித் சர்மா ஆடுவது மிகவும் கடினம். ஏனென்றால் உடல் சோர்வடைந்திருக்கும். அதனால் முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா ஆடுவது சந்தேகம்தான். 

டி20 போட்டிகளில் பல சாதனைகளை குவித்துவரும் ரோஹித் சர்மா, டி20 போட்டியை பொறுத்தமட்டில் செம எண்டர்டெயினர். எனவே ரோஹித் சர்மா முதல் டி20 போட்டியில் ஆடவில்லை என்றால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துவிடுவர்.