ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா மீண்டும் டெஸ்ட் அணியில் ஆடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். கடைசியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடியதுதான். அந்த தொடரின் பாதியிலேயே ரோஹித் நீக்கப்பட்டு ரஹானே சேர்க்கப்பட்டார். அதன்பிறகு ரோஹித் சர்மாவிற்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. 

ஆஃப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பிறகு முதல் போட்டியில் இந்திய அணியுடன் மோதியது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் கூட ரோஹித்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரோஹித்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இங்கிலாந்து தொடரில் விராட் கோலியை தவிர மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் சொதப்பினாலும், தொடக்க வீரர்கள் தான் மிக மோசமாக சொதப்பினர். அந்த நேரத்தில், அந்த வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க முயற்சித்த ரோஹித், தன்னை டெஸ்ட் அணியின் ஓபனராக களமிறக்கினால் தான் ஆட தயாராக இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்தார். ஆனாலும் அவரது குரலுக்கு தேர்வுக்குழு செவிமடுக்கவில்லை. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கூட பிரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் தான் எடுக்கப்பட்டனர். அவர்களில் ஹனுமா விஹாரிக்கு ஆட வாய்ப்பளிக்கப்பட்டது. 

அதன்பிறகு ஆசிய கோப்பையில் விராட் கோலி ஆடாததால் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மா, பேட்டிங்கிலும் கேப்டன்சியிலும் சிறப்பாக செயல்பட்டு ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடியபோதும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித் புறக்கணிக்கப்பட்டதற்கு கங்குலி, ஹர்பஜன் சிங் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை மிரர் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணியில் ரோஹித் சர்மா ஆடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்துகள் நன்றாக மேலெழும்பும் என்பதால், பவுன்சர் பந்துகளை ஆடுவதில் வல்லவரான ரோஹித் சர்மாவிற்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரோஹித்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.