விஜய் ஹசாரே தொடரில் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா ஆட உள்ளார். இந்த தகவலை மும்பை அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகார்கர் உறுதி செய்துள்ளார். 

உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடர் நடந்துவருகிறது. லீக் சுற்று போட்டிகள் வரும் 11ம் தேதியுடன் முடிவடைகின்றன. வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் காலிறுதி போட்டிகளும் 17 மற்றும் 18ம் தேதிகளில் அரையிறுதி போட்டிகளும் 20ம் தேதி இறுதி போட்டியும் நடைபெற உள்ளது. 

ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்காத மற்றும் இந்திய அணியில் ஆட நீண்ட காலமாக வாய்ப்பு கிடைக்காத இந்திய வீரர்கள் விஜய் ஹசாரேவில் ஆடிவருகின்றனர். ரெய்னா, காம்பீர், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்கள் விஜய் ஹசாரேவில் ஆடிவருகின்றனர். 

இந்நிலையில், நாக் அவுட் சுற்று போட்டிகளில் மும்பை அணிக்காக இந்திய அணியின் தொடக்க வீரரும் ஒருநாள் அணியின் துணை கேப்டனுமான ரோஹித் சர்மா ஆட உள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா இல்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. எனவே அதற்கு தயாராகும் வண்ணம் விஜய் ஹசாரேவில் மும்பை அணிக்காக ரோஹித் ஆட முடிவு செய்துள்ளார். 

நாக் அவுட் சுற்றுக்கான மும்பை அணி வீரர்கள் விவரம் வரும் நாளை(10ம் தேதி) அறிவிக்கப்படும் என அந்த அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். மேலும் ரோஹித் சர்மா அணியில் ஆடினாலும் ஷ்ரேயாஸ் ஐயர் தான் கேப்டனாக செயல்படுவார் எனவும் அகார்கர் தெரிவித்துள்ளார். 

ரோஹித் சர்மா மும்பை அணிக்காக ஆடும் நிலையில், தோனி ஜார்க்கண்ட் அணிக்காக ஆடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தோனி சமீபகாலமாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். பேட்டிங்கில் மிகவும் மோசமாக செயல்பட்டு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடாததால், நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் மற்றும் விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் போட்டிகளில் ஆடுவது, தோனிக்கு பேட்டிங்கில் டச்சிலேயே இருக்கும் உதவும் என்பதால், இந்த போட்டிகளில் தோனி ஆட வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருந்தார். 

ஆனால் ஜார்க்கண்ட் அணியின் ஆலோசகராக உள்ள தோனி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மட்டுமல்லாமல் அணியின் சீனியர் வீரர் தோனி என்பதால் அவர் விஜய் ஹசாரேவில் ஆடமாட்டார் என்றே தெரிகிறது.