வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ரோஹித் சர்மாவின் செயல், ஒட்டுமொத்த இந்தியர்களையும் நெகிழவைத்து விட்டது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி 162 ரன்களை குவித்தார். நான்காவது முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பு இருந்தும் அதை தவறவிட்டார். 

எனினும் 7வது முறையாக ஒருநாள் போட்டியில் 150 ரன்களை கடந்து சாதனை படைத்த ரோஹித், அதிக சிக்ஸர்கள் விளாசியதிலும் சச்சின் சாதனையை முறியடித்தார். பேட்டிங்கில் அசத்திய ரோஹித் சர்மா, ஃபீல்டிங்கிலும் அசத்தினார். முதல் ஸ்லிப்பில் நின்று 3 கேட்ச்களை பிடித்தார் ரோஹித். 

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கின்போது, ரோஹித் பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது ரசிகர்கள் ரோஹித்.. ரோஹித் என உற்சாக முழக்கமிட்டனர். உடனே ரோஹித் சர்மா, இந்தியா என முழக்கமிடுமாறு சைகை செய்தார். உடனே ரசிகர்கள் இந்தியா, இந்தியா என உற்சாகமாக முழக்கமிட்டனர். ரோஹித் சர்மாவின் சுயநலமற்ற இந்த செயல், ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியர்களையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.